ஊழல் கட்சிகளை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும்
நெய்வேலி கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

கடலூர், பிப். 29-

ஊழல் கட்சிகளான அதிமுகவையும் திமுகவையும் வீழ்த்தி மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்று நெய்வேலி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டம், நெய்வேலி, வட்டம் 8 ரோடு சந்திப்பில் நடைபெற்றது. நெய்வேலி நகரச் செயலாளர் எஸ். திருஅரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மீனாட்சிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், 2004 முதல் 2015 வரை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து பெரு முதலாளிகளுக்கு சலுகை வழங்கிய மத்திய பாஜக அரசு, விவசாயிகள் கடன், மாணவர்கள் கல்விக் கடனை ரத்து செய்ய முன்வரவில்லை என்றார்.பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்களில் குறியாக உள்ளன. பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்கள் செய்து வரும் வேலைகளை தனியார் நிறுவனத்திடம் தாரைவார்ப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களாக நடந்து வரும் கிரானைட், தாது மணல் கொள்ளை, ஊழலில் அதிமுக, திமுகவுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் இவர்களது ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. மாறாக, ஆட்சியாளர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்றும் அவர் கடுமையாக சாடினார்.தமிழக அரசியல் கலாச்சாரத்தை அதிமுக-திமுக இரண்டுமே சீரழித்து விட்டன.

திமுக குடும்பமே ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது. இவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய ராமகிருஷ்ணன், அதிமுக ஆட்சியிலும் அனைத்து துறைகளிலும் லஞ்சம்-ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஊழல் ஒழிப்பு பற்றி பேச இந்த இரு கட்சிகளுக்கும் அருகதை இல்லை. மக்கள் நலக்கூட்டணியை ஆட்சி அமைந்ததும் ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டு வருவோம் என்றும் உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: