புதுதில்லி, பிப்.24-

ஜேஎன்யு மாணவர்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறை மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை உள்ளிட்ட பிரச்சனைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலங்களவை 5 முறை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோடிஅரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.மக்களவையில் காங்கிரஸ் தலைமை கொறடா ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசும்போது, வெமுலா தற்கொலைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரின் தேவையற்ற,அத்துமீறிய தலையீடே காரணம் என்றார்.புனே திரைப்படக் கல்லூரி, சென்னை ஐஐடி, ஜேஎன்யு விவகாரம் போன்றவை அரசு இளைஞர்களின் குரலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முயல்வதையே காட்டுகிறது என்றார்.

உயர்கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் ஆக்கிரமிக்க முயல்வதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த வேளையில் சாதிய, மதவெறி கண்ணோட்டத்துடன் கல்வி நிலையங்களை காவிமயமாக்க மோடி அரசு முயல்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

மாநிலங்களவை

மாநிலங்களவையில் செவ்வாயன்று ரோஹித் வெமுலா தற்கொலை மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீதான அடக்குமுறை விவாதத்திற்கு முதலாவதாக எடுத்துக்கொள்ளப்படுவதாக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அவை துவங்கியவுடனே பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ரோஹித் வெமுலா பிரச்சனையை எழுப்பினார்.இதுகுறித்து விவாதம் நடைபெறவுள்ளதால் அப்போது பேசலாம் என்று கூறியதை மாயாவதி ஏற்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெமுலா தற்கொலை தொடர்பாக, மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், வெமுலா தற்கொலை தொடர்பாக, விசாரித்து வரும் குழுவில் தலித் ஒருவரை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு பாஜகதரப்பில் பதிலளிக்கவில்லை. ஆனால், ஸ்மிருதி இரானி பேசும்போது, இறந்த ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவதாக கூறினார்.அடுத்தடுத்து அவை கூடியபோதும், பிஎஸ்பி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக அவையை ஒத்திவைக்க நேரிட்டது. இதனால் ரோஹித் வெமுலா தற்கொலை மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீதானஅடக்குமுறை குறித்து செவ்வாயன்று மாநிலங்களவையில் விவாதிக்க முடியவில்லை.

ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீது மோடி அரசின் பாசிச பாணி தாக்குதல், நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை மதவெறிமயமாக்கும் முயற்சி ஆகியவற்றை கண்டித்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: