ரோஹித் வெமுலாவின் இறப்பு குறித்த விவாதத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்:-
ரோஹித் ஒரு தேசத் துரோகி எனவும் ஒரு பிள்ளையின் மரணம் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றெல்லாம் கட்சிகளை சாடுகிறார்.
ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் மன நிலை எப்படி இருந்தது என்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விளக்குகிறார்:-
அமைச்சர் ஸ்மிருதி ராணியை நான் நேரில் சந்தித்து என் மகன் ரோஹித் வெமுலாவை எந்த அடிப்படையில் தேச துரோகி எனக் கூறுகிறீர்கள் ?. அவனும் பிற தலித் மாணவர்களும் தேச விரோத தீவிரவாதிகள் எனவும், எனது மகன் தலித் அல்ல எனவும், தலித் என பொய்ச் சான்றிதழ் பெற்றவன் எனவும் குற்றம் சுமத்தியுள்ளீர்களே! இது சரிதானா ?. தங்களின் கல்வித் தகுதிக்காக பொய்ச் சான்றிதழ் பெற்ற நீங்கள் பிறரையும் அவ்வாறே எண்ணுகிறீர்களா?
நீங்கள் எனது மகனின் உதவித் தொகையை நிறுத்தினீர்கள். அவனை சஸ்பெண்ட் செய்தீர்கள். மனிதவள மேம்பாட்டு அமைச்சரான உங்களுக்கு கல்வியின் மதிப்பு தெரியவில்லை.
பிஎச்டி படிக்குமளவுக்கு ஒரு தலித் உயர்வதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதைத் தங்களால் உணர முடியவில்லை.
அதிலுள்ள கஷ்டம், போராட்டம், கண்ணீர் மற்றும் தியாகத்தைத் தங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 26 ஆண்டுகளாக நாங்கள் கட்டியதை 3 மாதங்களில் சிதைத்து எனது 26 வயது மகனை சாகடித்து விட்டீர்கள்.
நான் பிரதமர் மோடியைப் பார்த்துக் கேட்கிறேன், 5 நாட்கள் வரை அமைதியாக இருந்தீர்கள். அதன் பின்னர் அம்பேத்கர் பல்கலைக் கழகம் சென்றீர்கள். மாணவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு “பாரத மாதா தன்னுடைய புதல்வனை இழந்து விட்டாள்” என முழங்கினீர்கள். நீங்கள் கூறுவது சரியா ?
அல்லது உங்கள் அமைச்சர் கூறுவது சரியா ? எது சரி ? யார் எனக்கு விடை தருவர் ?
மேலும் பிருந்தா காரத் விவரிக்கிறார்.:- ரோஹித்திற்காக நீதி கேட்டு டெல்லியில் நடந்த பேரணியில் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். ரோஹித் தாயார் ராதிகா அப்பேரணியில் முழுமையாகப் பங்கு கொள்கிறார். தனது இளைய மகன் ராஜா அருகில் வர கண்ணீரைத் துடைத்த வண்ணம் அமைதியாக அதே நேரத்தில் கம்பீரமாக நீதி கேட்கும் போராளியாக நடக்கிறார்.
தலித் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த ராதிகா தனது இளமைச் காலத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்தவர். மற்ற தலித் குடும்பங்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்ததோ அதே கொடுமையை ராதிகாவின் பெற்றோரும் அனுபவித்திருக்கின்றனர். சூழ்நிலை காரணமாக வேறொரு குடும்பத்தின் வளர்ப்பு பிள்ளையாக பிற்பட்ட வகுப்பிராக வளர்கிறார்.
ஆண்டுகள் கடந்தன, வளர்ப்புப் பெற்றோரின் அணுகுமுறையில் மாறுதல்கள் ஏற்பட்டன. தலித் மீதான வன்முறை ஏவப்பட்டது. 14 வயதிலேயே திருமணமாகிறது. 3 குழந்தைகளுக்கு தாயாகிறார். கணவரும் தனது மனைவ ராதிகா ஒரு தலித் என அறிந்து சாதிய வன்முறையை ஏவியதால் அவரிடமிருந்து பிரிந்து மீண்டும் வளர்ப்புப் பெற்றோரை நாடுகிறார்.
தனது சொந்த உழைப்பால் குழந்தைகளை வளர்க்கிறார். தலித் காலனியில் குடியேறுகிறார். இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்த பிறகும் மீண்டும் மீண்டும் சாதிய வன்முறையை ஏவுவதைக் கண்டு ராதிகா ஆவேசம் கொள்கிறார்.
ஆணவப் பேச்சு
ஸ்மிருதி ராணியின் குற்றச்சாட்டு மற்றும் அதனை எதிரொலிக்கும் சுஷ்மா சுவராஜின் போக்கு அவரை கடுமையாகக் காயப்படுத்தியுள்ளது. அவர் தலித் அல்ல என்பதை நிரூபிக்க காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். அவரது குடும்பத்தினரும், வளர்ப்புப் பெற்றோரும் அரசு மாவட்ட அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணை குறித்த அச்சம் காரணமாக வளர்ப்புத் தாயார் அஞ்சனி தேவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஆசிரியரான அஞ்சனி தேவி இந்தியசாதிய அமைப்பில் தலித் ஒருவரை தத்தெடுத்தால் ஏற்படும் விளைவை அனுபவித்து விட்டார். அவரும் தானும் அதற்கான விலையைக் கொடுத்து விட்டோம் என ராதிகா நினைக்கிறார்.
தனது மகன் ரோஹித்திற்கு தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்ததாகவும், அவனுக்குக் கிடைத்த உதவித் தொகை எவ்வளவு உதவியாக இருந்தது எனவும் கூறுகிறார்.
ஏற்கனவே கூறியுள்ளது போல் ராதிகாவின் கேள்விகளுக்குப் பதில்கள் நாடாளுமன்ற விவாதத்தில் கிடைக்கவில்லை. எனவே அவருக்கு நீதி கிடைக்கவில்லை. கல்வி முறையிலுள்ள சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க தாழ்த்தப்பட்டோர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஒரு ரோஹித் சட்டம் வேண்டும். அவர்தம் பெயரில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட வேண்டும். பல நூறு தலித் மாணவர்கள் பி.எச்டி பட்டம் பெற்றிட வேண்டும்.
இச்சாதிய வன்முறைக்கான சட்டம் நிறைவேற்றப்படும் வரை தனது இளைய மகன் ராஜாவைப் பல்கலைக் கழகம் செல்வதை தான் விரும்பவில்லை எனவும், ரோஹித்தின் கதி ராஜாவுக்கும் ஏற்படக் கூடாது என அஞ்சுகிறார்.
சந்திரபாபு நாயுடு அளித்த ரூ.5 லட்சம் உதவியை ராதிகா குடும்பம் மறுத்துள்ளது. அவரது இளைய மகன் ராஜாவுக்கு அவரின் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு நிரந்தர வேலையும், உரிய குடியிருப்பு வசதியும் செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய நாட்டில் நிலவும் சாதிய வன்முறையால் காயப்பட்டுள்ள அந்த ரணங்களுக்கு ஓரளவு நிவாரணமாக இருக்கும் என்று  பிருந்தா காரத் Brinda and rohith vemula mother rathikaதெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: