ஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா
ஜேஎன்யு நிகழ்வை திரித்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு

புதுதில்லி, பிப். 24-

ஜேஎன்யுவில் நடைபெற்ற நிகழ்வுகளை ஜீ நியூஸ் தொலைக்காட்சி மிகப்பெரிய அளவில் திரித்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில்பணியாற்றிய செய்தியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக விஷ்வ தீபக் என்ற செய்தியாளர் ஜனதா கா ரிப்போர்ட்டர் என்னும் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் எழுதியிருப்பதன் சாராம்சங்கள் வருமாறு:“நாம், இதழியலாளர்களாகிய எல்லோரையும் கேள்வி கேட்போம். ஆனால் நம்மை நாமே கேட்டுக்கொள்ள மாட்டோம். மற்றவர்களின் பொறுப்புகள் குறித்துஎழுதுவோம். ஆனால் நம் பொறுப்புகள் குறித்து கவலைப்பட மாட்டோம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் நாமோ, நம்முடைய ஸ்தாபனங்களோ, நம் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளோ உண்மையில் ஜனநாயகப்பூர்வமானவைகளாக இருக்கின்றனவா? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, எல்லோருடைய கேள்வியுமாகும்.

ஆபத்தான போக்கு

தேசியவாதம் என்ற போர்வையில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் குற்றம்செய்தவராக பிணைக்கப்பட்டிருப்பதும், ஊடகங்கள் விசாரணை செய்துஅவரை நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் என்று பிரகடனம் செய்திருப்பதும், மிகவும் ஆபத்தான போக்காகும். இதழியலாளர்கள் என்ற முறையில் நம் பணிஎன்பது அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பதுதானே தவிர, அவர்களின் மோசடியான காரியங்களுக்குத் துணை போவதல்ல.நாம் வேலைபார்க்கும் நிறுவனம் செய்யச் சொல்வதையெல்லாம் கீழ்ப்படிந்து செய்வதா அல்லது மனசாட்சி சொல்வதுபோல் நேர்மையாக நடந்துகொள்வதா என்ற கேள்வி வரும்போது, நான்இரண்டாவதையே தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே ஜீ நியூஸ்தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து என் பணியை ராஜினாமா செய்துள்ளேன். என்னுடைய ராஜினாமாவை, இந்த அமைப்புடன் அல்லும் பகலும் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஜேஎன்யு நண்பர்களுக்கும், லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கன்னய்ய குமார்களுக்கும் அர்ப்பணம் செய்கிறேன்.

மன்னிக்க முடியாதவனாகிவிடுவேன்

கீழ்க்கண்ட கடிதத்தை நான் ஜீ நியூஸ் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறேன். “அன்பார்ந்த ஜீ நியூஸ், ஒரு வருடம், நான்கு மாதங்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு, உங்களிடமிருந்து பிரிய வேண்டும் என்ற நேரம் வந்துவிட்டது. முன்னதாகவே இத்தகைய முடிவை நான் எடுத்திருக்கவேண்டும். இப்போதும்கூட செய்யத் தவறினேன் என்றால், என்னை நானே மன்னித்துக்கொள்ள முடியாதவனாகிவிடுவேன்.நான் ஓர் இதழியலாளன் என்பதோடு, நான் இந்த நாட்டின் குடிமகனும் ஆவேன். இதன்பெயரில்தான் இந்த நாட்டில் குருட்டுத்தனமான தேசியவாதம் என்ற நஞ்சு பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நாடு குடிமக்களுக்கிடையே யுத்தத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எவ்விதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புமின்றி என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்படி உங்களை வலியுறுத்துகிறேன்.

வகுப்புவாதம் நிரம்பிய அறைகள்

2014 மே மாதத்திலிருந்து, அதாவது நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து, அநேகமாக அனைத்துசெய்தி அறைகளும் வகுப்புவாதம் நிரம்பியுள்ள அறைகளாகமாறியிருக்கின்றன. ஜி நியூஸ்நிறுவத்தின் நிலைமைகள் மிகவும்கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய வார்த்தைகளை நான் பயன்படுத்துவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். ஆயினும் இங்குள்ள நிலைமையை சித்தரிக்க இதைத்தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கன்னய்யாவுடன் வேறு பலரையும் காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் மக்களின் கண்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறோம்.

நாளைய தினம் எவரேனும் ஒருவர் கொல்லப்பட்டால், அந்தப் பொறுப்பை யார்எடுத்துக் கொள்வது? ஒருவர் கொலைசெய்யப்படுவதற்கான அல்லது ஒருசில குடும்பங்களை அழிப்பதற்கான சூழ்நிலையை மட்டும் நாம் உருவாக்கவில்லை, மாறாகமக்களிடையே கலகங்களை உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இந்த நாட்டில் மக்களுக்கிடையே ஒரு யுத்தத்தை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னவிதமான நாட்டுப்பற்று இது? என்னவிதமான இதழியல் தொழில் இது? …’’இவ்வாறு விஷ்வ தீபக் தன் ராஜினாமா கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.