மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் மேஜர் ஜெய்பால் சிங் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தில்லியில் பிப்ரவரி 11இல் நடைபெற்றது. இந்த நினைவு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்திய செயற்குழு உறுப்பினர் ஜோகிந்தர் சர்மா, மத்தியக்குழு உறுப்பினர் புஸ்பிந்தர் சிங் கெர்வால் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி தலைமை வகித்தார்.மேஜர் ஜெய்பால் சிங் தில்லி மாநிலக்குழுவின் செயலாளராக மட்டும் செயல்படவில்லை. மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கட்சியை கட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த அமைப்பாளராகவும் தற்பெருமையற்றவராகவும் எளிதில் தனது கருத்தினாலும் செயலினாலும் மற்றவர்களை கவர்ந்துவிடும் ஆளுமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சிரமங்களையும், இயக்கத்திற்கெதிரான பகைவர்களால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டவர். மேலும் எளிய கம்யூனிஸ்ட்டாக தான் ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் சறுக்காமல் கட்சியே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர். அவர் கடந்த 1982இல் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 11ஆவது அகில இந்திய மாநாட்டின்போது காலமானார். மாநாடே அந்த மாபெரும் தோழருக்கு அஞ்சலி செலுத்தியது.

சர்வாதிகாரம் தலைதூக்குகிறது

தில்லியில் நடைபெற்ற விழாவில் சீத்தாராம் யெச்சூரி பேசும் போது, மேஜர் ஜெய்பால் சிங் எங்களுடைய தலைவர் மட்டுமல்ல, மிக நல்ல நண்பராகவும் இருந்தார். அவர் அரசின் கொள்கைகளை எவ்வித குழப்பமும் இல்லாமல் விமர்சிப்பதையும் அதே வேளையில் மக்களுக்கான மாற்று என்ன என்பதையும் தெளிவாக முன்வைப்பார். மேலும் எவ்வித வளங்களற்ற நாடு அல்ல, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிட மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்தியவர்.

இன்றைக்கு வகுப்புவாதத் தாக்குதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மக்களாட்சிக்கும் பெரும் ஆபத்து வந்துள்ளது. சர்வாதிகாரம் தலைதூக்குகிறது. ஆகவே இன்றைய சூழலில் இடதுசாரி சக்திகளை பலப்படுத்துவது மட்டுமே நாட்டை பாதுகாப்பதற்கான ஒரே வழி. ஆகவே நமது கட்சியை வலுவாக கட்டுவதற்கான முயற்சியையும், அதோடு மக்களை அணி திரட்டுவதன் மூலமுமே நல்ல இந்தியாவை கட்டியமைக்க முடியும் என சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

பிருந்தா காரத் பேசும்போது,மேஜர் ஜெய்பால் சிங்கின் பங்களிப்பு குறித்து தோழர் பிருந்தா காரத் நினைவு கூர்ந்ததாவது :

இந்த பிராந்தியத்தில் கட்சியை கட்டியதில் பெரும்பங்கு வகித்தவர். மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய மகத்தான போராளி. பிரிட்டிஷ் ராணுவத்தில் வகுப்புவாத நடவடிக்கைகள் பரவாமல் தடுத்ததில் பெரும்பங்கு வகித்தார். பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை, ஒருங்கிணைத்ததிலும் உடன் வழிகாட்டியதிலும் தில்லியில் (ஜேஎம்எஸ்) அமைப்பை கட்டியதிலும் பெரும்பங்கு வகித்தார் என்று குறிப்பிட்டார். ஜோகிந்தர் சர்மா பேசும்போது, மேஜர் ஜெய்பால் சிங் ஒரு பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாகவும் சிறந்த கம்யூனிஸ்ட்டாகவும் வாழ்ந்தவர். மேலும் மக்கள் எளிமையாக அணுகக்கூடிய தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

எவ்வித புகழ்ச்சியையும் விரும்பாத எதிர்பார்ப்பும் இல்லாத அர்ப்பணிப்பு உணர்வோடு இயக்கப் பணியாற்றிய மிகச்சிறந்த முன்னோடி என புகழஞ்சலி செலுத்தினார்.பி.எஸ்.கெர்வால் கூறும்போது, மேஜர் ஜெய்பால் சிங் அவர்கள் எனக்கு தோழராகவும், தந்தையாகவும் மிகச் சிறந்த நண்பராகவும் இருந்தார். அவர் ஒரு கொரில்லா போராளி. ஆம் தெலுங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் போராளிகளுக்கும் பயிற்சி கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். பிரிட்டிஷ் ராணுவத்தினரை கொல்ல சதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டவர். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களின் பட்டியலில் மேஜரையும் சேர்த்தது. விடுதலைக்குப் பின்னர் நேரு தலைமையிலான அரசு அவரது வீரத்தை பாராட்டி கௌரவித்தது என பி.எஸ்.கெர்வால் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.