தி ஹேக், பிப். 24-

மேற்காசியாவிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களில் 36 சதவிகிதம் பேர் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் கூறியுள்ளது.ஒவ்வொரு நாளும் அபாயகரமான கடல் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் மேற்காசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அந்நிய சக்திகளின் தாக்குதல்கள் ஆகிய வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் வெளியேறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையத்தின் புள்ளிவிபரங்களின்படி, செப்டம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டு குழந்தைகள் மூழ்கி இறந்து விடுகிறார்கள். கிடைத்துள்ள விபரங்களின்படி, இதுவரையில் 340 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிகளில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். அகதிகளுக்கு பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப் படுகின்றன.

உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க வெளியேறும் அகதிகளில் 36 சதவிகிதம் பேர் குழந்தைகள் என்றுசர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டு கின்றன. துருக்கியிலிருந்து கிரீசுக்கு ஏகன்கடல் வழியாகச் செல்கையில்தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி, இந்தத் துயர சம்பவங்கள் மனித குலத்தால் தாங்கிக் கொள்ள முடியாதவையாகும்.

உடனடியாகத் தலையிட்டு இதை நிறுத்த வேண்டும். அகதிகளுக்கு பாதுகாப்பான வழிகளை அடையாளம் காட்டுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2016 ஆம் ஆண்டில் மட்டும் 410 பேர் இதுவரையில் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், இறந்தவர்களின் எண்ணிக்கை முழுமையானதாகவும் இல்லை. இது மேற்காசியா சார்ந்த பிரச்சனையோ அல்லது ஐரோப்பா சார்ந்ததோ அல்ல. ஒட்டுமொத்த உலகின் மனிதாபிமானப் பிரச்சனையாகும் என்று குறிப்பிட்டார்.

Leave A Reply