தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது அறிவியல் மொழி. பருவநிலைமாற்றம், எரிசக்திப் பிரச்சனை ஆகியவற்றுக்கு மாணவர்கள் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கேட்டுக் கொண்டுள்ளார். புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதற்காக நாம் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். அத்தனையும் உண்மைதான். அதற்காக மோடியின் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? உலக அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெறுவது அரிதினும் அரிதாகிவிட்டது. இந்திய மாணவர்கள் அயல்நாட்டு ஆய்வு நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்துகின்றனர். அப்போது மட்டும் அவர்கள் இந்தியர்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் வெளி நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே அத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுவதற்குரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுந்தால் இல்லை என்ற பதில் தானே கிடைக்கிறது.

இதனையும்மீறி சாதனைகளை நமது மாணவர்கள் நிகழ்த்தத்தான் செய்கிறார்கள்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களி டையே அறிவியல்ப் பூர்வ சிந்தனைகளை பரவச் செய் திட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பிரதமர் மோடி இந்திய அறிவியல் மாநாட்டிலேயே விஞ்ஞானி கள் மத்தியிலேயே புராண சாகசக் கற்பிதங்களை விஞ்ஞானம் என்று சாதிக்கிறார். அரசின் தலைவர்எவ்வழியோ அவரது அமைச்சர்களும் அவ்வழிதானேபயணிப்பர். ஏனெனில் அவர்களின் குருகுலம் ஆர்எஸ்எஸ் தானே . இவர்கள் அதன் சேவகர்கள் தானே.இப்போது இவர்கள் சௌகரியமாக தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள் என்றால் அதற்கு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு ஆறாண்டு காலம் பாதை போட்டுத் தந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.பொதுவாகவே மத்திய அரசு கல்விக்காக நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொண்டே வருகிறது.அதிலும் மோடி அரசு மிக மோசமாகக் குறைத்து விட்டது. முதலுக்கே மோசமான நிலை இருக்கும் போது, ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதி ஒதுக்கீடு எந்த நிலையில் இருக்கும். அதனால் ஆய்வு மாணவர் களின் எண்ணிக்கை குறையும் நிலையே ஏற்பட்டுள்ளது. கல்விக்கு பட்ஜெட்டில் 10 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

ஆயினும் ஐந்து மடங்கு குறை வாகவே ஒதுக்கப்படுகிறது. ஆனால் மேடைகளிலோ மாநாடுகளிலோ விழாக்களிலோ பேசும் போது அள்ளி வீசுவதில் மோடியை மிஞ்ச ஆளில்லைதான். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுமுதுமொழி.

பள்ளிப் பருவத்திலேயே இளம் மாணவர்களின் சிந்தனைத் திறனை அறிவியல் மனோ பாவத்தை வளர்த்தால் தான் பல்கலைக்கழகத்தில் பயன்கிட்டும். அறிவியல் இயக்க மாநாடுகளில் அத்தகைய இளம் குருத்துக்கள் இனம் கண்டு கொள்ளப்பட்டு வளர்க்கப்படும் போது தான் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்.

Leave A Reply