திண்டுக்கல், பிப்.23-வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக அரசு அதிகாரிகளின் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மணிக்கூண்டில் திங்களன்று நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது:

துரோகமிழைத்த கரங்கள்

அதிமுக அரசு ஒரு கேடு கெட்ட அரசு.எம்ஜிஆர் உருவத்தை கையில் பச்சை குத்தி இருப்பான். நெஞ்சில் பூஜித்துக் கொண்டிருப்பான். அதிமுகவிற்காக அவன் கொடி பிடித்து உழைத்திருப்பான்.அவன் மகளுக்கு ஒரு ஆயா வேலை கூடஇந்த ஆட்சியில் வாங்க முடியாது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் வாங்கமுடியாது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆவது என்று கேட்கிறேன். மதுக்கொடுமைக்கு எதிராக 2400 கி.மீ. எனது கால்கள் கொப்பளிக்க நடைபயணம் சென்றேன். மதுவால் இந்த நாடு நாசமாகிவிட்டது. 4 வயது குழந்தை தெய்வம் என்று சொல்வார்கள். அதைக்கூட குடிக்க வைத்து நாசம் செய்கிறார்கள். இதை எப்படி வெளியில் சொல்ல முடியும்?இதிலிருந்து தமிழகத்தை மீட்பது எப்படி? ஜெயலலிதா நாங்கள் மது விலக்கைகொண்டுவருவோம் என்று சட்டசபையில் ஒப்புக்காக கூட அறிவிக்கவில்லை, ஏன்? அதில் வரும் பணம் ரூ.29 ஆயிரம்கோடி மட்டுமல்ல. இவர்கள் குடும்பத்திற்கு வருகிறது. ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது. ஆனால் நிழல் சகோதரிக்கு குடும்பம் உள்ளது. மன்னார்குடி மாஃபியா இருக்கிறதே, அவர் மதுபான உற்பத்தி செய்கிறார்களே, மிடாஸ் நிறுவனம் நடத்துகிறார்களே மூடுவார்களா? கலைஞர் தரப்பில் உள்ள சாராய ஆலைகளை மூடுவார்களா?

திமுக, அதிமுக தலையில் கத்தி

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகத்தின் பரப்பன அக்ரஹாரத்தில் ஜெயிலில் இருந்தார் ஜெயலலிதா. அடுத்து என்ன என்ன நடக்கும். நான் ஒரு வழக்கறிஞன். இது தான் தீர்ப்பு என்று சொல்லக்கூடாது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டிலே கத்தி தலைக்கு மேலே தொங்கிக்கொண்டு இருக்கிறது அதிமுக அரசுக்கு. உடனே திமுகவினர் அதிமுகவை பிடி பிடி என்று வைகோ பிடித்ததாக சந்தோசப்படலாம். அண்ணன் கலைஞரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர் மீது இன்னொரு கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அது 2ஜி ஸ்பெக்ட்ரம். கலைஞரும் மதுக்கடைகளை ஒழிப்போம் என்கிறார். அவரைப்போல ஜகஜால புரட்டு வேலைகளை எவரும் செய்ய முடியாது. 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார்.கெயில் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது திமுக அரசு. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது கருணாநிதி அரசு. கையெழுத்து போட்ட கருணாநிதியின் கரங்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்த கரங்கள்.

கூடா நட்புடன் மீண்டும் கூட்டணி

கூடா நட்பு கேடாய் விளையும் என் றும், இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் காங்கிரசைப் பற்றி கலைஞர் சொன்னார். இப்போது எந்த அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்? அதிமுகவிற்கும் நமக்கும் தான் போட்டிஅதிமுகவிற்கும் மக்கள் நலக்கூட்டணிக்கும் தான் போட்டி. திமுக ஓரமாகப் போய்விட்டது. இதில் கருத்துக்கணிப்பு வேறு. ஏமாந்துவிடாதீர்கள். நாம்4 கட்சிகளும் சேர்ந்து மொத்தமே 7 சதவீதம் தானாம். இப்படி கணக்கு போட்டேவீணாகப் போகப் போகிறீர்கள்.65 சதவீதம் பேர் எந்த கட்சியிலும் கிடையாது. மக்கள் அலை அலையாக இந்த பக்கம் திரும்புகிறார்கள். இளைஞர்கள் எந்த கட்சியிலும் இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் பக்கம் வருகிறார்கள். அந்த 65 சதவீத மக்கள் மக்கள்நலக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

விழிப்புடன் இருக்க வேண்டும்

நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பணம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வண்டியினை கொண்டு அதிமுகவினர் சேர்த்துவிட்டார்கள். பல அதிகாரிகள் வீட்டில் தான் இருக்கிறது. விடியற்காலை வீடு வீடாக பார்சல் மாதிரி போட்டுக்கொண்டே வருவார்கள். தேர்தல் அறிவித்த பிறகு விழிப்புடன் இருக்க வேண்டும். நமது 4 கட்சிகளைப் போல எந்தகட்சியில் இருக்கிறார்கள் தொண்டர்கள்? நம்மிடம் துட்டு கிடையாது. பால்பாக்கெட் போடுபவர் போல வருவார்கள். யார்வந்தாலும் எதற்கு இந்த தெருவுக்கு வருகிறீர்கள் என்று கேட்க வேண்டும். கடைகளுக்கு சிலிப் கொடுத்து விடுவார்கள். அந்த கடைக்கு போனால் ஜவுளி வாங்கலாம். வெண்கலப்பாத்திரம் ரூ.5000க்கு வாங்கலாம் என்று சொல்வார்கள். தோழர்களே உஷார்!

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுவோம்

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். தடையில்லா மும்முனை மின்சாரம் எல்லோருக்கும் வழங்குவோம்.விவசாய வங்கிக்கடன், தேசிய வங்கிக்கடன்களை ரத்துசெய்வோம்.ஆன்-லைன் வர்த்தகம், யூக வர்த்தகம், இணையதள வர்த்தகம் எல்லாவற்றையும் தடை செய்வோம். சில்லரை வியாபாரிகளை பாதுகாப்போம். வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க தக்க திட்டங்கள் வகுப்போம்.வெளிப்படையான கூட்டணி ஆட்சியை அமைப்போம்.

செய்தி: இலமு, படங்கள்: பொன்மாறன்

Leave a Reply

You must be logged in to post a comment.