விழுப்புரம், பிப்.11-

கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து வக்கல்லூரி மாணவிகள் 3 பேர்மர்மச்சாவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழன்று (பிப். 11) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டனர்.இக்கல்லூரியின் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாகவும் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர்.

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.முன்னதாக முற்றுகைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜி. ராமகிருஷ்ணன், “2008ல் திமுக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. பாமக தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தக் கல்லூரி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது,” என்று சுட்டிக்காட்டினார்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி நடத்த ஆயுஷ் அமைப்பு சொல்லிருக்கிற எந்த கட்டமைப்பும் இல்லாமல் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவக்கழகம் இக்கல்லூரி இயங்க எவ்வாறு அனுமதித்தது? போலியான கல்லூரிக்கு திமுக ஆட்சி எப்படி அங்கீகாரம் அளிக்க முன்வந்தது? போதிய வசதிகளில்லாத இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எப்படி ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்தது என்பதெல்லாம் மர்மமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

“கல்லூரியில் உரிய வசதிகளில்லை, கட்டணக் கொள்ளையடிக்கப்படுகிறது என மாணவர்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களை நடத்தினர். மாவட்ட நிர்வாகம் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் ஆர்டிஓ தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணையில் மேற்படி கல்லூரியில் எந்த கட்டமைப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களிடையே இருந்த பிணைப்பு என்ன,” என்றும் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.இப்படி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போதும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போதும், பாமக அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதும் கல்லூரி நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இவர்கள் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது. அரசு அதிகாரிகள், – முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள், – துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர் என பலர் இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதால் மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா படுகொலை, கல்லூரி இயங்க அனுமதி வழங்கிய அதிகாரிகள், அமைச்சர்களின் முறைகேடுகள் ஆகிய பின்புலங்களை வெளியே கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், “மாணவிகளின் சடலங்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நானும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்களும் மருத்துவமனையில் இருந்த மாவட்ட ஆட்சியர் –மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையான சென்னை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

ஆனால், மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விழுப்புரத்தில்தான் நடத்துவோம் என பிடிவாதமாக கூறினர்,” என்று தெரிவித்தார்.சரண்யா, பிரியங்காவின் பெற்றோர்களை மிரட்டி விழுப்புரத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதிக்க வைத்தனர். மோனிஷாவின் தந்தை தமிழரசன் விழுப்புரத்தில் பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது, சென்னை மருத்துவமனையில்தான் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தார்கள். மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் சொன்னபோதே சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனை செய்யாத மர்மம் என்ன என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.மாணவிகள் உயிரிழந்தது தற்கொலைதான் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை செய்யாமலே செய்தியாளர்களை சந்தித்து கூறினார். இப்போது மாணவிகள் நீரில் மூழ்கியதால் உயிரிழக்கவில்லை, நுரையீரலில் தண்ணீர் இல்லை, இரத்தக் கட்டுகள் இருக்கின்றன இது தற்கொலையல்ல என பிரேதப் பரிசோதனை முடிவு கூறுகிறதே. சிபிசிஐடி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே. இதற்கு மாவட்டக் கண்காணிப்பாளர் என்ன சொல்லப் போகிறார்? விசாரணையை முழுமையாக செய்யாமல் தற்கொலை என முடிவுக்கு வரவும், தற்கொலைக்கு தூண்டுதல் என வழக்குப் பதியவும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு என்ன நோக்கம் இருந்தது? இப்பிரச்சனையில் காவல்துறையையும் நம்ப முடியவில்லை, – மாநில அரசையும் நம்ப முடியவில்லை.

ஆகவேதான் சிபிஐ விசாரணை கோருகிறோம் என்றும் அவர் கூறினார்.போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, ஜி. ஆனந்தன், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் கே. கலியன், தெற்கு மாவட்டச் செயலாளர் டி. ஏழுமலை, கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: