அறுவடையின் துவக்கத்தை ஆராதிக்கிற பாரம்பரியம் உலகம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு முறைகளில் அறுவடையின் துவக்கத்தை உழவர்கள் ஆனந்தமாக கொண்டாடுகிறார்கள். இதில் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று சிறப்பிக்கப்படுகிற பொங்கல் திருநாள் என்பது தனித்துவமிக்கது. மதம் சார்ந்த பண்டிகைகள் காலண்டர் முழுவதும் நிரம்பி வழிந்தாலும் பொங்கல் என்பது மதத்தோடு அல்ல, மனித உழைப்போடு அதிகம் தொடர்புடைய ஒன்று.பொங்கல் விழாவின் மூன்றாம் நாள் திருவள்ளுவர் தினம் என்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. வான் சிறப்பையும், உழவையும் வள்ளுவர் வியந்து பாராட்டியிருக்கிறார். கடவுள் வாழ்த்தில் எந்தவொரு கடவுளையும் குறிப்பிட்டு பாடாத வள்ளுவர் அதற்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பை வைத்திருக்கிறார். மழைநீரை அமிழ்தம் என்று கொண்டாடுகிறார் நம்முடைய பாட்டன் வள்ளுவர். அமிழ்தத்தைக் கூட அசுரர்களை வஞ்சித்து தேவர்கள் எனப்படுவோர் மட்டும் எடுத்துக் கொண்டதாக புராணம் பேசுகிறது.

ஆனால் வானிலிருந்து விழுகின்ற அமிழ்தமாகிய மழை அனைவருக்கும் பொதுவானது. இதில் தனியுடைமை இல்லை.உழவின் பெருமையை பத்து குறளில் பாடியுள்ளார் வள்ளுவர். சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலைஎன்பது முதல் குறள். ஏர்பின்னது உலகம் என்று பாடிய வள்ளுவன் அந்த தொழில் உலகம் உள்ளவரை உழன்று கொண்டுதான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்து வைத்திருந்திருக்கிறார். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் பாயிர செய்யுளில் கடவுளைப் பாடாமல் இயற்கையை பாடியுள்ளார். ஞாயிறை, திங்களை, மாமழையை போற்றி தன்னுடைய காவியத்தை துவங்கியுள்ளார் இளங்கோவடிகள்.இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஆனந்தமான அந்தரங்கத்தை கொண்டாடும்விழாதான் பொங்கல் திருநாள். முதல் நாள் போகிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. வீடுகளில் இருக்கும் பழங்குப்பைகளை மட்டுமின்றி மனதிலிருக்கும் குப்பைகளையும் அகற்றி, புதிய நம்பிக்கையை பெறும் நாள் தான் இது. புதுப்பானை, புது அரிசி, மஞ்சள், இஞ்சி, செங்கரும்பு, வாசல் கோலம் என வண்ணமயமாக வருகிறது பொங்கல். கிராமங்களில் பொங்கலையொட்டி ஈச்சமரத்தில் வெட்டியெடுக்கப்பட்ட தோகையை கொண்டு கயிறு தயாரித்து அதில் ஆவாரம்பூ, கண்ணு பூலைச்செடி, மாவிலை, பிரண்டை போன்றவற்றை தோரணமாக கட்டி தொங்கவிடுவார்கள்.

இன்றைக்கு பல இடங்களில் இந்த மாலைக்கு பதிலாக வாசம் இல்லாத பிளாஸ்டிக் மாலைகள் தொங்கவிடப்படுகின்றன. இயற்கையாக விளைந்த பொருள்கள் ஒவ்வொன்றும் மருந்தாகவும் இருக்கிறது. ஆவாரம்பூ சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து என்பதும், கண்ணுபூலைச் செடி பல நோய்களை தீர்க்கக்கூடிய மகத்துவம் கொண்டது என்றும், பிரண்டை உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் என்பதும் இன்றைய மருத்துவம் பேசுகிற செய்தி. மேல்நாட்டு உலகம் மருந்தை கேப்சுலாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்கள் அதை தோரணம் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். பொங்கல் என்பது ஊரை ஒன்றுபடுத்துகிற விழா. அவரவர் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டாலும், மாட்டுப் பொங்கல் அன்றும், காணும் பொங்கல் அன்றும் ஊர் ஒன்று கூடி நிற்கும்.ஒரு காலத்தில் யார் அதிக ஆடு, மாடு வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் பெரும் செல்வந்தர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால்தான் வள்ளுவர் கூட செல்வத்தை மாடு என்கிறார். தன்னோடு உழைத்த கால்நடைகளை உழவர்கள் கவுரவப்படுத்துகிற நாள்தான் மாட்டுப் பொங்கல். இத்தகைய பாரம்பரியம் உலகில் எத்தனை நாடுகளில் இருக்கிறது என்று தெரியவில்லை.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. தை மகள் வந்தால் விளைச்சல் வரும், விளைச்சல் வந்தால் கிழிந்துகிடக்கிற வாழ்க்கை தைக்கப்படும் என்று உழவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இன்றைக்கு ஆளும் அரசுகள் விவசாயத்தைவிட்டு உழவர்களை வெளியேற்றியே தீருவது என்று வெறிகொண்டு அலைகிறார்கள்.சோம்பலாக இருப்பவர்களைப் பார்த்து நிலம் எனும் நல்லாள் நகுவாள் என்றார் வள்ளுவர். ஆனால் உழவர்களுக்கு கிடைக்காத நிலத்தை பன்னாட்டு திமிங்கலங்களுக்கு பங்கு வைக்க துடிக்கிறார்கள் மோடி வகையறாக்கள். இதனால் நிலம் எனும் நல்லாள் அழுதுகொண்டிருக்கிறாள்.உலகத்தின் ஆதித் தொழில் உழவுதான். பூமியைக் கீறி விதைக்கிற விதைகளில் வெடித்துக் கிளம்புவது தாவரம் மட்டுமல்ல உழவர்களின் நம்பிக்கையும் கூட. எத்தனை முறை பொய்த்துப் போனாலும் விதையிடமும், உழவர்களிடமும் இருக்கிற நம்பிக்கையின் ஈரம் மட்டும் காய்வதே இல்லை. இந்த நம்பிக்கை ஏர் வழிதான் நடக்கிறது இன்று மட்டுமல்ல நாளையும்.

Leave A Reply

%d bloggers like this: