புதுதில்லி, ஜன.14 –

2016-17-ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலையறிக்கை பிப்ரவரி 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்தியநிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார். வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார். பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டுலீப் வருடம் என்பதால் பிப்ரவரி 29-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.அதைத்தொடர்ந்து, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயந்த் சின்ஹா, அடுத்தமாதம் 29-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த பட்ஜெட் அடுத்த 3 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தொழில்துறை வளர்ந்தால் தான் வரி வருவாயை அதிகரித்து வறுமையை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். பணவீக்கத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு அனுமதி அளித்துள்ள புதிய பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் நிதியமைச்சர் ஜெட்லி தலைமையில்,

இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறை செயலாளர் ரத்தன் வட்டாள் தலைமையிலான அதிகாரிகள் குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா மற்றும் பங்கு விலக்கல் துறை செயலாளர் நீரஜ் குப்தா ஆகியோர் உள்ளனர்.மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதற்குப் பின், தனது மூன்றாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.