இஸ்லாமாபாத் ஜன.14

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் எதிரொலியாக வெள்ளியன்று நடைபெறவிருந்த இந்திய – பாகிஸ்தான் வெளியுறவுச்செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று பதான்கோட்டிலுள்ள விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலையே நிலவியது. ஏனெனில் பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்சி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூர் ஆசார் கைது செய்யப்பட்டது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வரவில்லை என இந்திய தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வெள்ளியன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் அங்கு செல்வதாக இருந்தது மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக இரு நாட்களுக்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை மக்கள் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, தாக்குதலில் ஈடுபட்ட சில தீவிரவாதிகளையும் குறிப்பாக தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆசாரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இதுவரை இதுகுறித்து உறுதியான அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: