தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை பறைசாற்றுகிற திருவிழாவாகிய பொங்கல், அறுவடை துவங்குவதன் ஆனந்த வெளிப்பாடாக ஒரு காலத்தில் துவங்கியது. இயற்கையோடு மனித சமூகத்துக்குள்ள உறவை உணர்த்துவதாகவும், புதிய நம்பிக்கையை பெறும் நாளாகவும் இந்த தை திருநாள் விழா அமைந்துள்ளது.

உழவரே உலகத்துக்கு அச்சாணி என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் இன்றைக்கு உழவு என்பது உழலும் தொழிலாக மாற்றப்பட்டுவிட்டது. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாற்றப்பட்டதால் கிராமங்கள் தங்களது முகங்களை இழந்து வருகின்றன. கிராமங்களை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்ற முழக்கம் நெடுநாளாக ஒலித்து வருகிறது. ஆனால் பெரும் பகுதி மக்களுக்கு நிலம் என்பது கனவாகவே உள்ளது. விதை, உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில் நெல், கரும்பு போன்ற விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. உழவும், உழவர்களும் பாதுகாக்கப்படுவதன் மூலமே உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.விவசாய பணி இல்லாததால் நகர்ப்புறத்திற்கு அத்தக்கூலிகளாக விவசாயத் தொழிலாளர்கள் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் நயவஞ்சகமாக முடக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் அணிவகுப்பதன் மூலமே எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவை பெருமளவில் நடந்த நிலையில், கார்ப்பரேட் பெருநிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் நீர்நிலைகள், நீர் போக்குவரத்துக்கான வழிகளை வகைதொகையின்றி ஆக்கிரமித்து வருகின்றனர். இதனுடைய விளைவை அண்மையில் பெய்த பெருமழையின்போது தமிழகம் அனுபவித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்தனர். நீர்நிலைகளை உரிய முறையில் பராமரிப்பதன் மூலமே நீராதாரத்தை பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களையும் சமாளிக்க முடியும். வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடர் ஒருபுறம் இருக்க, அந்த பேரிடருக்கு காரணமாக ஆண்ட, ஆள்கிற அரசுகளும் உள்ளன. அதேநேரத்தில் இந்த பேரிடரின்போது மனிதநேயம் பொங்கி வழிந்தது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மத்திய பாஜக அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடைசிநேரத்தில் கண்துடைப்பாக அவர்கள் எடுத்த நடவடிக்கையும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. மாநில அதிமுக அரசும் இந்தப் பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தவில்லை. தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரின் தனித்த பண்பாடுகளை, பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலமே பன்முக பண்பாட்டை பாதுகாக்க முடியும்.தமிழ் மக்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சிப் பொங்கட்டும்.

சமூக விழாவாக விளங்குகிற பொங்கல் திருநாளில் தமிழ் சமூகத்திற்கு இனி வரும் காலம் இனிப்பூட்டும் காலமாக இருக்கட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது. –

ஜி. ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர்

Leave A Reply

%d bloggers like this: