மதுரை, ஜன. 14 –

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடுபகுதிகளில் கடை அடைப்பு – உண்ணாவிரதம் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டை நடத்தஅனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நடத்தக்கூடாது என்றால் அதற்கேற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தற்போதைய சூழலில் அலங்காநல்லூர்,– பாலமேடு பகுதிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தடை விதிப்பதுபற்றியும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.இதையொட்டி அலங்காநல்லூர்,– பாலமேடு செல்லும் வழிகளில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 26 செல்போன் கோபுரங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 அதிவிரைவுப் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.