திருநெல்வேலி:

பாளையங்கோட்டை அருகே முத்தூர் மலைப்பகுதியில் 300 ஏக்கர் நிலத்தில் விமானப்படை சார்பில் ரேடார் கண்காணிப்பு தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) திரவ இயக்க திட்ட மையம் அமைந்துள்ளது. அங்கு பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதையொட்டி மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விண்வெளி ஆய்வு திட்டத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கடந்த மாதம் 13-ந் தேதி இரவில், அந்த மையத்தை சுற்றி மர்ம விமானம் பறந்து வட்டமிட்டுச் சென்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள் கடந்த மாதம், உரிய அனுமதி இல்லாமல் வேலைக்கு வந்திருந்த ஒடிசா மாநில வாலிபர் போலீசாரிடம் பிடிபட்டார். இதற்கிடையே பஞ்சாப் மாநிலம் பதான்கோட் ராணுவ விமானத் தளம் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

அதற்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். வாகனங்களில் துணை ராணுவ வீரர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து ஞாயிறன்று கூடுதலாக 4 வாகனங்களில், துணை ராணுவத்தினர் நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு வந்துள்ளனர். மொத்தம் 48 வீரர்கள் வந்திருந்தனர்.இந்த நிலையில் திங்களன்று மாலையில் விமானப்படை தொழில்நுட்ப பிரிவினர் சில வாகனங்களில் நெல்லைக்கு வந்தனர். அந்த வாகனங்களிலும் அதிநவீன ரேடார், கண்காணிப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன.பாளையங்கோட்டையில் இருந்து சிவந்திப்பட்டி செல்லும் ரோட்டையொட்டி உள்ள முத்தூர் மலைப்பகுதியில் விமானப்படை சார்பில் ரேடார் கண்காணிப்பு தளம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்காக மலை மற்றும் மலை அடிவார பகுதி என சுமார் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வீரர்கள் வருகிற 18-ந்தேதி வரை நெல்லையில் தங்கி இருந்து, கண்காணிப்பு தளம் அமைக்க பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.இங்கு விமானப்படை சார்பில் ரேடார் கண்காணிப்பு தளம் அமைத்து, இங்கிருந்தவாறு தென் பகுதியில் வான்வெளி தாக்குதல் தொடர்பான சிக்னல்கள் கண்காணிக்கப்படும். மேலும் துணை ராணுவ குழுவினர், 3 பிரிவுகளாக சென்று விஜயநாராயணம் கடற்படை தளம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையங்களில் கண்காணித்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.