புதுதில்லி,ஜன.12-

ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்திக் கொள்ள அனுமதியளித்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன்ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு என்பதை ஏற்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது போன்ற விழாக்களுக்கான அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீசும் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு அறிவிக்கை ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு அனுமதி அளித்து, கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மத்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. “கரடி, குரங்கு, புலி,சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத்தக்கூடாது; இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்து
வதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது” என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

13 பேர் வழக்கு இதற்கு விலங்குகள் நலவாரியமும், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பான ‘பீட்டா’வும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு அவசர கோலத்தில் இப்படி அரசாணை வெளியிட்டிருப்பதாகவும், இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட 4 அமைப்புக்கள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்களன்று 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீது திங்களன்று நடந்த விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 7ம் தேதி வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது. இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் கூறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும்வகையில் நடத்தப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

மேலும், ‘பீட்டா’ தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப் படுவதாகவும், 2010 முதல் 2014-ஆம்ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 1100 பேர் ஜல்லிக்கட்டால் காயமடைந்து உள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்ளனர்; அதில் ஒரு குழந்தையும் அடங்கும்; அத்துடன், 2014-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மட்டும் 3 காளைமாடுகள் இறந்து விட்டன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இடைக்காலத் தடை

இந்த 13 மனுக்களும், அவசர வழக்குகளாக கருதப்பட்டு, செவ்வாயன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பாகஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது சட்ட விரோதம் என்று வாதிட்டார். வனவிலங்குப் பட்டியலிலிருந்து காளையை நீக்கியதும் சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று அவர் மீண்டும் கூறினார்.ஆனால், மத்திய அரசின் அரசாணையில், காளை வதை குறித்துகவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஜல்லிக்கட்டானது ஸ்பெயினில் நடப்பது போன்று கிடையாது; மத்திய அரசின் அறிவிக்கையும் காளை மீதான அக்கறைகளையும் உள்ளடக்கியே உள்ளது ; தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு பாரம்பரிய விழா என்பதை ஏற்க முடியாது என்றும், கடந்த சில ஆண்டுகளாக அது நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களுக்கு அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும், தடையை நீக்கவேண்டியதற்கான அவசியம் குறித்து மத்திய – மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.