உள்நாட்டில் கல்வி பயில்வதற்கு மட்டுமின்றி வெளிநாடுகளில் படிப்பதற்கும் பெரும்பாலான வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. உயர்கல்வி கற்கும் ஏழை நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு அரசின் அறிவிப்புகளைக் கண்டு வங்கிகள் பக்கம் சென்றால் வங்கியின் மேலாளர் அவரின் சொந்த பணத்தை கொடுப்பது போல் கோபமாகப் பார்ப்பதும் அவசியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் அறிவிப்பில் சொல்லப்படுவது, உள்நாட்டில் கல்வி பயில குறைந்தபட்சம் ரூ. 50,000 முதல் அதிகபட்சம் 10லட்சம் வரை கடன் வழங்கப்படும். வெளிநாடுகளில் கல்விபயில ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20லட்சம் வரை கடன் வழங்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் சிறப்புப் பிரிவின் கீழ் ரூ. 30 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.

கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்தே கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்று அரசுடமை வங்கிகள் சொல்கின்றன. இருப்பினும் வங்கிக்கு வங்கி கல்விக் கடனுக்கான வட்டித்தொகை மாறுபடுகிறது. கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும் காலம் ஆகியவற்றை பொறுத்து வட்டித்தொகை ஆண்டுக்கு 9.7சதவீதம் முதல் 18சதவீதம் வரை மாறுபடும். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை பொறுத்தவரை பெரும்பாலான வங்கிகள் 5முதல் 7ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்காக மட்டும் சில சிறப்புப் பிரிவுகளின் கீழ் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் பெரும்பாலும் ரூ. 4லட்சம் வரையிலான கடனுக்கு மட்டும் எந்தவிதமான பிணையும் கேட்க வேண்டியதில்லை. எனினும் இருநபர் உத்தரவாதம் அவசியமாகும்.

ரூ.4லட்சத்துக்கு மேற்பட்ட கடனுக்கு அதே தொகைக்கு இணையான அடமானம் வீடு, நகை, நிலம் உள்ளிட்டவை தேவைப்படும். கல்விக்கடனானது சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரிலேயே வழங்கவேண்டும். மாணவர் பட்டம் பெற்ற பிறகு வேலைக்குச் சேர்ந்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பிச் செலுத்தவேண்டும். கல்விக்கடன் பெறவிரும்பும் மாணவர் கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே கல்விக்கடன் கோருவது சரியாக இருக்கும். உயர்கல்வி பெறுவதற்கு அரசும் வங்கிகளும் அறிவித்துள்ள விதிமுறைகளும் வழிமுறைகளும் இதுதான்.கல்விக்கடன் பெறுவது குறித்த இத்தகைய நடைமுறைகள் மற்றும் வட்டிவிகிதம் உள்ளிட்ட விவரங்களை வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறான வழிமுறைகள் குறித்து வங்கிகளை அணுகிக் கேட்டால் அதற்கும் எவ்வித பலனும் இல்லை என்பதுதான் நிலைமை.விவசாயிகள் கடன் பெற்றால் திருப்பிச் செலுத்துவதில்லை. அரசு கடனை தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கடனை திருப்பிச் செலுத்துவதே இல்லை என்பதுதான் விவசாயத்திற்கு கடன் கொடுக்காததற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதேபோல்தான் மாணவர்களையும் பார்க்கின்றனர். விவசாயம் நலிவுறும்போது ஆதரிக்கவேண்டியது அரசு, அரசுடமை வங்கிகளின் கடமையில்லையா? விவசாயம் தோற்பது விவசாயிக்கு மட்டுமா? நாட்டுக்கே தோல்வி இல்லையா? வங்கிகள் கடன் தராதபோது கந்துவட்டிக்காரர்களின் வாசலில்தானே போய் நிற்கிறார்கள். எப்படி கடன் சுமையால் இன்று நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களோ, அதைப்போலவே கல்விக்கடன் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு அரசும் அரசுடமை வங்கிகளும் காரணமாகிவிடக்கூடாது என்பதுதான் நமது கவலை.இன்று வராக் கடன்களின் அளவு ரூ.1,64,000 கோடியாக உயர்ந்துள்ளன. கிங்பிஷர் ஏர்லைன், வில்சம் டைமண்ட் மற்றும் ஜூவல்லரி போன்ற 4 நிறுவனங்கள் மட்டுமே ரூ.22,666 கோடி வராக்கடன்களைக் கொண்டுள்ளன. இவற்றை வசூலிப்பதற்கு காட்டப்படாத ஆர்வம் விவசாயிகள் கடன், சிறுதொழில் மற்றும் ஒன்று ரெண்டு கொடுக்கப்பட்டுள்ள கல்விக்கடனை வசூலிப்பதற்கு மட்டும் வங்கிகள் தீவிரம் காட்டுகின்றனவே ஏன்?சிறுவிவசாயி, சிறுதொழில் முனைவோர் மற்றும் கல்விக்கடன் கொடுக்கத் தயங்கும் வங்கிகள் சில பெரும்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் லாப நஷ்டம் பார்க்காமல் கடன்களை அள்ளி வழங்குகின்றனவே, இதற்கு என்ன காரணம்?இந்தியாவின் எதிர்காலத்தை வளமாக்க உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் துடிப்புடனும், இலக்குடனும் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

Leave a Reply

You must be logged in to post a comment.