ஒரு தலைமுறை காணாத அடைமழை கடந்த நவம்பர் எட்டாம் தேதி துவங்கி பெருமழையாய் உருகொண்டு நின்றது. மாதம் முழுவதும் மழை. மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. மிக எளிதாக பல்லாயிரம் ஆண்டுகளாய் கடலோடு கலந்த மழையின் பாதை எங்கும் அடைபட்டுக் கிடந்தன. நிலங்களில் தவழந்ததண்ணீர் மனிதன் செய்த தவறுகளை பயன்படுத்திக்கொண்டது. தன் வழக்க மான வழிதடம் தேடி அலைந்த மழை நீர், அடைக்கப்பட்ட கட்டமைப்புகளால் வெள்ளமென திரண்டது. உயர்ந்து நின்றவீடுகளுக்குள் புகுந்தது. புலம் பெயர்ந்து, பெருநகர் அடைந்து, உச்சமென உழைத்து, அலைந்தலைந்து கிளையின் மீது சேர்த்த தேனடை சேமிப்பு உரு குலைந்தது. இருபதாண்டுகால மனித உழைப்பு நாசமானது, இரு பத்தாண்டு சேமிப்பை 20 நொடிகளில் கவர்ந்து சென்றது மழை. மாநகர் மனிதர்கள் பித்தாகி நின்றனர். இருண்டகாலம் அனுபவமாய் மாறியது.

image4203கழிக்க, குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் கழிவு நீரை முதலில் கண்டதுஇப்போதுதான். மெல்லிய புன்னகையுடன் வெள்ளம் நின்று ரசித்தது. “வரப்புயர” என அவ்வை பாட்டிச் சொன்னதை மாமன்னர்களும், மகாராணி களும் தவறாக புரிந்துக்கொண்டதன் விளைவு இது. நிலங்களில் கரையான வரப்பு உயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும். ஆனால் தங்கள் வரப்புகளை உயர்த்த நீர் வரப்புகளை கட்டிடங் களாய் மாற்றினர். வரப்புயர்ந்தது. அதனால்நீர் உயர்ந்தது. உயர்ந்த நீர் எங்கே செல் லும்? எளிதான மழைநீரின் கணக்கிது. எனினும் கோபப்படுகிறோம். நாசமாய் போன வெள்ளம் என சபிக்கின்றோம்.

நன்று!எப்படியாகினும் இந்த பெரு மழையும், வெள்ளமும் பல கதவுகளை திறந்துவைத்துள்ளது. அதில் ஒன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. ஆக்கிரமிப்புகள் எனில் உடனடியாக குடிசைகளை அகற்று வது என்ற சித்திரம்தான் எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த கொடூர அரசியல் குறித்து பின்பு விவாதிக்கலாம், இப்போது பெருநிறுவனங்களின் ஆக்கிர மிப்பையும் அவர்களது மனித நேயத்தை யும் விவாதிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களும், பெருமுதலாளிகளும், கணினி துறைகளும்கூட தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என நமது நண்பர்கள் மகிழ்ச்சியாக பேசித்திரிகின்றனர். உண்மை அதுவா? பன்னாட்டு நிறுவனங் களும், கணினிதுறை முதலாளிகளும் எங்கு தூய்மை செய்கின்றனர்? அதிகமாக அவர்களது அலுவலகங்கள் எதிரில்தான். அதற்கும் விளம்பரம் அவர்களுக்கு! ஆனால் இவைகளில் பணியாற்றும் இளைஞர்கள் இவர்களை போல அல்ல. தவித்த மக்களுக்காக பொருட்களை அள்ளிக்குவித்து,

கரடு முரடாண பாதைகளில் பயணித்து வந்தனர். உண்மை யான அக்கரையுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர். ஆனால் பெருமுதலாளி கள் செய்தது என்ன? கடலூர் மாவட்ட அனுபவம் பார்ப்போம்.கடலூர் மாவட்ட கடற்கரையோரம் தனது கட்டுமானப் பணிகளை செய்து வரும் அனல்மின்நிலையம் ஒரு மாதம்வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு செய்தது என்ன? சைமாசாயக்கழிவு ஆலை என்ன செய்தது? இந்த ஒரு நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கையை அழித்ததுதான் அதிகம். கடலூர் கடைமடை பாசன பகுதியாகும். எவ்வளவு மழை பொழிந்தாலும் வெள்ளம் சூழும் நிலை அரிதுதான்.

வெள்ளாறு, பரவனாறு, பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, உப்பனாறு, வட வாறு என்ற ஆறுகளும் இவைகளில் பிரி யும் ஏரிகளும் உண்டு. 18 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்ட வீராணம் ஏரி, பிருமாண்டமான பெருமால் ஏரி, வெல்லிங்டன் ஏரி, கொத்தவாச்சேரி ஏரி, பக்கிம்காம் கால்வாய், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தன் ஓடை, 450க்கும் மேற்பட்ட ஏரிகளும், பெரிய குளங்களும் இருந்த மாவட்டம் இது. எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கடலோடு ஓடி அடையும் நில அமைப்புக்கொண்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோரம் மெல்ல மெல்ல பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின. கடலூர் முதுநகரின் அருகில் துவங்கிய சிப்காட் மெல்ல மெல்ல சிதம்பரம் நோக்கி விஸ்தரித்து செல்கிறது.

சிப்காட் 2, சிப்காட் 3 என விரிவாக்கம் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடலூரிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் சிப்காட் 3 என்ற பகுதி சைமா சாயக்கழிவு அலைகளை தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு அமைத்துக்கொண்டு இருக்கிறது. இடையில் நாகார்ஜூனா எண் ணெய் சுத்திகரிப்பு ஆலை 1200 ஏக்கர்நிலங்களை கடற்கரையோரம் கையகப் படுத்தி வேலைகளை செய்து வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல்.எப்.எஸ் என்ற அனல் மின்நிலையம் சுமார் 1400 ஏக்கர் நிலங்களை வலைத்து தனது மின் உற்பத்தியை துவங்கி உள்ளது.

இவர்கள் கடற்கரையோரம் செய்த கட்டுமானப் பணிகள் உருவாக்கிய விளைவுகள் என்ன? சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள பகுதியில் தரை மட்டத்தை இயற்கையாய் உள்ளதைவிட மூன்று அடி உயர்த்திவிட்டனர். 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி விட்டனர். அதிலும் குறிப்பாக பெரியபட்டு, ஆண்டார்முள்ளிபள்ளம், தச்சமபாளையம், வாண்டியாம் பள்ளம், சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, மடவாபள்ளம், சாமியார்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள நான் காயிரம் ஏக்கர் நிலங்களின் வடிகால் வாய்க் காலை உள்ளே வைத்து காம்பவுண்டு சுவரை அடைத்துவிட்டனர். இதன் விளை வாக அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் மொத்தமாய் மூழ்கின, சவுக்கை நாற்று மொத்தமாய் கருகியது, காய்கறிகள் அழிந்தன. ஆனால் இந்த நிறுவனம் எந்த கவலையும் கொள்ளவில்லை.

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் நாங்கள் சென்று பார்வையிட்ட அன்றைய மாலையே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போராட்டத்தை துவக்கியதன் விளைவு உடனடியாக நிறுவன சுவர் உடைக்கப் பட்டு, வாய்க்கால்களை வெட்டும் பணிதுவக்கப்பட்டது. அடுத்த இரண்டுநாள் கிட்டதட்ட 3 கிலோ மீட்டர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அங்கு தேங்கிய தண்ணீர் பக்கிம்காம் கால்வாயில் கலக்கப்பட்டது. அதனால் சில ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள சவுக்கை நாற்று விவசாயிகளில் எட்டுமாத உழைப்பு கருகிப்போனது. மற்றொரு பக்கம் ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல் மின்நிலையம் புதுசத்திரம் ரயில் நிலையத்திலிருந்து கரிகுப்பத்தில் உள்ளதனது நிறுவனத்துள் நிலக்கரியை கொண்டு செல்ல ஒரு புதிய வழித் தடத்தை போட்டது. நிலத்திலிருந்து சுமார் 7 அடி உயரம் கொண்ட இரும்பு ரயில்பாதை சுமார் 6 கிலோமீட்டர் செல்கிறது. இப்பாதை பல கிராமங்களில் வடிகால் வழித்தடத்தை மொத்தமாய் அடைத்துச் செல்கிறது. ஒரு இடத்தில் மட்டும் சிறு குழாய்கள் அமைத்து வடிகால் எற் படுத்தி உள்ளனர். இந்த பெருமழை உருவாக்கிய வெள்ளம் அவ்வழியாக செல்லபல நாட்கள் ஆனது. அதற்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தன. ஆனால் 15 ஆயிரம் கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தினர் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து வரும் நிறுவனங்களால், சமவெளியில் ஓடிவருகிற மழைநீர் நிலங்களை கடந்து கடலில் கலக்கும் இயற்கைசமன்பாட்டை தொலைத்த கடற் கரையோரமாக கடலூர் மாறியுள்ளது. யாருமே எதிர்பாராத இந்த தொடர் மழையும் அது உருவாக்கிய வெள்ளமும் சுமார் ஒன்றரை மாதம் மக்கள் வாழ்க்கை யை முடக்கி போட்டது. எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் பசியுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தனர். இயற்கை யுடன் இணைந்து இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான வெள்ளமும் கடலூர் மாவட்ட மக்களை அவதிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கு பல்லாயிரம் கோடிமுதலீட்டில் உருவாகியுள்ள இந்த நிறு வனங்கள் என்ன செய்தன? இவர்களின் மனித நேயம் என்ன? ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத இந்த நிறுவனங்கள், அப்படியென்ன இவர்கள் மீது அக்கறை கொள்ள போகின்றன!மூன்று அடியில் நீர் கிடைக்கும் கடற்கரையை நாசப்படுத்தியவர்கள் இவர்கள், விவசாய விளை நிலங்கள் நெற்பயிரை இழந்து உள்ளது. ஒரு பட்டத்திற்கு சவுக்கு விவசாயத்தில் 4000 ரூபாயும், தைலம் வளர்ப்பில் 6000 ரூபாயும் பெற்றவர்கள் வாழ்க்கைநாசமாகியுள்ள சூழலில் இந்த நிறுவனங்கள் இரண்டு மூன்று கிராமங் களுக்கு மட்டும் ஓரிரு கிலோ அரிசியும், ஒருபோர்வையும் கொடுத்து தங்கள் கடமை யை முடித்துக்கொண்டன. எந்த மக்கள் கூலி வேலை செய்து பிழைத்தார்களோ அந்த நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பும் தராத இந்த நிறுவனங்கள், மழை வெள்ளத்தால் உருகுலைந்த இப்பகுதி மக்களுக்கு ஒருமாதகால உணவு தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்தால்கூட அவர்கள் நிறுவனத்திற்கு காம்பவுண்ட் சுவர் எழுப்ப பள்ளம் தோண்டிய பணத்தில்பத்தில் ஒரு பங்குதான் செலவாகி இருக்கும்.ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புடைசூழ மாவட்டத் தின் அனைத்து சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக சென்ற அமைச்சர்கள் கண்களுக்கு இப்பகுதி மக்கள் பிரச்சனை எட்டா தது அதிசயம்தான். எப்போதும் போல இப்போதும் பெருநிறுவனங்களுக்கு எதி ராக எதையும் செய்யாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. முதலாளித்துவம் எப்போதும் எளிய மக்கள்வாழ்க்கையை கண்கொண்டு பார்த்த தில்லை பார்க்கப்போவதும் இல்லை. அதற்கு இந்த பெருமழையில் உருவான இந்த செயற்கை வெள்ளமே ஒரு சாட்சி.

Leave a Reply

You must be logged in to post a comment.