புதுதில்லி, ஜன.9-

ஜல்லிக்கட்டுதமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இந்த அறிவிக்கை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேதியில் இருந்து கரடி, குரங்கு, புலி, காளை ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ அல்லது பழக்கப்படுத்தி வித்தையில் ஈடுபடுத்தவோ கூடாது. இருப்பினும், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்துகாளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் எருதுவண்டி போட்டிகள் ஆகியவற்றுக்காக காளைகளை பழக்கப்படுத்தி, காட்சிப்படுத்த அரசு அனுமதிக்கிறது.அதேவேளையில் எருதுவண்டி போட்டிகளை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவான சரியான வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை, வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் 15 மீட்டர் தூரத்துக்குள் அடக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என்று ஒவ்வொரு காளை மாடும் கால்நடை பராமரிப்பு துறையால் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். காளை மாடுகளுக்குஊக்க மருந்துகள் வழங்கப்படுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளது.முன்னதாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தினார்.

முதல்வர் நன்றி

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் வரவேற்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். வேறெந்த தடைகளும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் உரியஏற்பாடு செய்வதுடன், போட்டிகள் நடைபெறும்பகுதிகளில் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்தஜனவரி 3 அன்று மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் இத்தகைய அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.