சென்னைக்கு அருகாமையில், மதுராந்தகத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. இந்த ஏரிக்கு அருகில் உள்ள வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராம ஏரிகளும் நிரம்பிவிட்டன.

இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் இந்த முறை பறவைகளின் எண்ணிக்கையும் அவைகள் தங்கும் காலமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேடந்தாங்கலுக்கு ஜெர்மன், ஆஸ்திரேலியா, ஜப்பான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பறவைகள் தற்போது வந்துள்ளன. இவை அங்கு கூடுகட்டும் பணியை தொடங்கி உள்ளன.

கரண்டிவாயன், நீர் நாகம், உன்னிகொத்தி, பெரிய வல்லை கொக்கு, சின்ன வல்லை கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, குருட்டுகொக்கு, கூழக்கடா, கருப்பு–வெள்ளை மீன் கொத்தி, வக்கா, கிரால் மீன் கொக்கு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகைகளைச் சேர்ந்த 15360 பறவைகள் வந்துள்ளன. இவை 2016 ஜூலை மாதம் வரை இங்கேயே தங்கி குஞ்சு பொறிக்கும்.

இந்த நாட்களில் வேடந்தாங்கல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பட்டாசு வெடிக்க மாட்டார்கள். திருமண விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடிப்பது கிடையாது. பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் திருவிழாவை கூட தள்ளிவைப்பது வழக்கம். இது இந்தியாவில், முதன் முதலாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட பறவைகள் சரணலாயமாகும்.  உள்ளூர் சமூகத்தினாரால் இந்த சரணாலயம் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

பருவகால பறவைகளின் வருகை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாடு முழுவதிலும் இருந்து பறவை ஆர்வலர்களையும் பறவைகளை நேசிப்பவர்களையும் ஈர்க்கிறது. அரிய மற்றும் வித்தியாசமான பறவை இனங்களான கர்கனெய், ஆ°திரேலியாவின் கிரே பெலிகன், இலங்கையின் பாம்பு பறவை, கிரே ஹெரான், கிளாஸி ஐபி°, திறந்த அலகு நாரை, சைபீரிய கொக்கு மற்றும் °பாட் பில்ட் டக் முதலியவை அடங்கும். வேடந்தாங்கல் நம் நாட்டின் சிறிய பறவை புகலிடங்களில் ஒன்றாகும். மொத்தப் பரப்பு 40 ஹெக்டேராகும். மிகவும் பழமை வாய்ந்த வேடந்தாங்கல், சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது.

இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர்.வேடந்தாங்கல் என்றால் ‘வேடர்களின் கிராமம்’ என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு பறவைகளை பார்க்க தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.

சிறியவர்களுக்கு ரூ.2–ம், பெரியவர்களுக்கு ரூ.5–ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவைகளை பார்க்க பைணகுலர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து 1 மணி நேரத்துக்கு 1 முறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வனச்சரகர் மற்றும் வனக் காவலர்கள் செய்து வருகிறார்கள்.

Leave A Reply