2011ல்  தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா முன்பிருந்த அரசு அமல்படுத்திய சில இலவசதிட்டங்களுடன் புதிதாக சில திட்டங்களையும் அறிவித்தார். 20 கிலோ இலவச அரிசி திட்டம், மிக்சி,கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டம், ஏழை பெண்கள் திருமண உதவி என்ற வகையில் 4 கிராம் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டம், இலவச ஆடு கள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவை சிறப்பு திட்டத்தில் இடம் பெறுபவை.இந்த திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு ஓரளவு உதவிடும் திட்டங்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதற்கான நிதி ஆதாரத்தை எவ்வாறு கையாண்டது என்பது தான் கேள்வி? இந்த 5 ஆண்டு காலத்தில் மாநில அரசு இந்த இலவச திட்டங்களுக்கு செலவழித்த மொத்த தொகை எவ்வளவு? இக்காலத்தில் மாநில அரசு கூடுதலாக எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பதை கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, புதிதாக வாங்கியகடனில் ஒரு பகுதிதான் இந்த இலவச திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது என்று கருதினால் அது தவறல்ல.

2015-16-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது மாநில அரசின் கடன் பற்றி குறிப்பிடும்போது அதிமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 79,687 கோடி கூடுதலாக கடன் வாங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு முந்தைய ஆட்சி (திமுக) காலத்தில் ரூ. 1,31,796 கோடி கடன். தற்போது அது ரூ.2,11,483 கோடியாக பெருகியுள்ளது என்கிறது அவரது கணக்கு. இவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் முந்தைய திமுக ஆட்சியாளர்கள் பெரும் கடன்சுமை வைத்துவிட்டு சென்று விட்டனர் என்று புலம்பியது வேறு கதை.

ஓரிரு வருடங்கள் அதை காரணம் காட் டியே மக்களுக்கு சால்ஜாப்பு கூறியதும் நினைவிற்கு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மாநில
அரசு பெற்ற கட னைக் காட்டிலும் மிகக்குறைவாகவே இலவச திட்டங்களுக்கு அரசு செலவு செய்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவன்றி மதுபான விற்பனை மூலம் அடித்த கொள்ளை தனிக்கதை. அதிமுக அரசு 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் 5 இலவச திட்டங்களுக்கும் ஒதுக்கிய தொகை விவரம் வருமாறு:- கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு
புதிதாக அறிவித்த இலவச திட்டங் களுக்கு ஒதுக்கிய தொகை ரூ. 44,397 கோடிமட்டுமே. இதுவும் ஒதுக்கிய தொகைதானே தவிர, உண்மையாக செலவழித்த தொகை குறைவாகவே இருக்கும்.

உதாரணத்திற்கு ஆடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு 2013-14ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கிய தொகை  198.25 கோடி. ஆனால் செலவழித்த தொகையோ ரூ. 76.50 கோடி மட்டுமே. 5 ஆண்டுகளில் மொத்தமாக 60,000 கறவை மாடுகளும், 7 லட்சம் குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்போவதாக அரசு இலக்கு, தமிழ்நாட்டில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் இது ஒரு சிறு பகுதியினருக்கே உதவிடும். இருப்பினும் இதற்கான ஒதுக்கீட்டில் குறைவாகவே செலவு செய்யப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்க. பொதுவிநியோக இலவச அரிசி திட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஏற்கெனவே ஆண்டுதோறும் சராசரியாக செலவழித்து வந்த ரூ. 4000 கோடி தொகையினை ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் கூடுதலாக இலவச அரிசி திட்டத்திற்கு ரூ. 1000  கோடிக்கும் சற்று அதிகமாக செலவிடப்படுகிறது என்பதே உண்மை.

அதிமுக ஆட்சி காலத்தில் கடன் வாங்கி அமல்படுத்திய இலவச திட்டங்களுக்கான கூடுதல் கடன் சுமை அடுத்து வரும் ஆட்சியாளர்கள் தலையில்தான் விழும். புதிதாக ஆட்சிக்கு வரும் ஒரு அரசு சில புதிய சலுகை திட்டங்களை அறிவிப்பதும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு உகந்தது தான். ஆனால் அத்தகைய இலவச திட்டங்களுக்கான நிதியை அரசு தனது வருவாயிலிருந்து உருவாக்க வேண்டுமே அல்லாது கடனை வாங்கி செலவு செய்துவிட்டு, அடுத்து வருபவர்கள் சுமக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. அவ்வாறு கடன் வாங்கி செலவு செய்துவிட்டு தனது அரசின் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும் நியாயமில்லை. அதற்கு பதிலாக கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை ஆற்று மணல் அக்கிரமங்களையெல்லலாம் தடுத்து நிறுத்தி தனியாருக்கு சென்று கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசின் நிதி வருவாயாக மாற்றி அதன் மூலம் இந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் வரவேற்கலாம். ஆனால் நடந்தது வேறு. கடன் ஒருபுறமிருக்க, கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு ஏழை குடும்பங்களின் வாழ்வைக் கெடுத்து மதுபானம் விற்றதின் மூலம் அடித்த கொள்ளை விற்பனை வரி மற்றும் எக்ஸைஸ் வரி ஆகியவகையில் மொத்தமாக ரூ. 119022 கோடி. ஆண்டு வாரியாக விவரம் வருமாறு: (கோடிகளில்)

    2011 – 12    18081
    2012 – 13    21680
    2013 – 14    23401
    2014 – 15    26188
    2015 – 16    29672 (எதிர்பார்ப்பு)
    மொத்தம்        1,19,022

மதுபானம் விற்றதின் மூலம் கிடைத்த ரூ. 119000 கோடி வருமானத்திற்கும் மேல் ரூ. 79,687 கோடி கூடுதலாகக் கடன் வாங்கித்தான் அதிமுக அரசு அதில் ஒரு சிறுபகுதியை இலவச திட்டங்களுக்கு ஒதுக்கி சாதனை செய்துள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த துவக்கத்தி லேயே மின் கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு மூலம் தனக்கு வாக்களித்த மக்களை பதம்பார்த்தது. மின் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 8000 கோடியும், பஸ் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 2200 கோடியும் மக்கள் மீது சுமை ஏற்றியது.
கடந்த 4 ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே ரூ. 40,000 கோடிக்கு மேல்அதிமுக அரசு மக்களை கொள்ளையடித்தது. அதிமுக ஆட்சி கொடுத்தது ரூ. 45,000 கோடி என்றால் மக்களிடமிருந்து எடுத்தது ரூ. 2,50,000 கோடி. நாலரை ஆண்டுகால ஆட்சி சாதனை பற்றி என்னத்த சொல்ல? மக்களிடம் இவற்றினை விளக்கினால் எது சாதனை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

இலவச திட்டங்களுக்கான செலவு (தொகை கணக்கு கோடிகளில்)

இலவச திட்டங்கள்                                        2011-12    2012-13    2013-14   2014-15    2015-16
இலவச அரிசி திட்டம்                                    4,500         4,900        4,900        5,300        5,300
ஃபேன், மிக்சி, கிரைண்டர் திட்டம்                1,250    2,000    1,500    2,000    2,000
ஆடுகள்/கறவை மாடுகள் வழங்கும் திட்டம்   191    244    250    242    242
லேப்டாப் வழங்கும் திட்டம்                            912    1,500    1,500    1,100    1,100
ஏழை பெண்கள் தாலிக்கு தங்கம்
திருமண உதவி திட்டம்                                   574    748    750    757    703
7,367    9,392    8,900    9,393    9,345
  மொத்தம்              44,397 கோடி

கட்டுரையாளர்:-சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.உதயகுமார்

Leave A Reply

%d bloggers like this: