தூத்துக்குடி, நவ.26-

தூத்துக்குடியில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. தூத்துக்குடியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக, ராஜீவ் நகர், பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனி, ராஜகோபால் நகர்,ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் 3வது நாளாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாமல் உணவின்றி மொட்டை மாடிகளில் தவித்து வருகின்றனர்.மேலும் அங்கு நாய், பன்றி உள்ளிட்டவைகள் செத்து மிதப்பதால்சுகாதாரக் கேடு நிலவுகிறது. வெள்ள நீரை அப்புறப்படுத்தவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவோ அதிகாரிகள் யாரும் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி அன்னை தெரசாநகரில் 5அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எம்எல்ஏவை கண்டித்து மறியல்இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற ஜேசிபி மூலம் சாலையை வெட்டிவிட முயன்றனர். அப்போதுஅங்கு வந்த சி.த.செல்லப்பாண்டியன் எம்எல்ஏ, அங்குள்ள பலசரக்குகடைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சாலையை வெட்டிவிடாமல் ஜேசிபி வாகனத்தை திருப்பி அனுப்பிவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் எம்எல்ஏவைக் கண்டித்து மில்லர்புரம் பகுதியில் தூத்துக்குடி – நெல்லை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபோல் வெள்ள நீரைஅகற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில்புதிய பேருந்துநிலையம் அருகே மற்றும் ஸ்டேட் பாங்க் காலனி மின்வாரியஅலுவலகம், முன்பும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். புதுக்கோட்டை அருகே உள்ள ஆறுமுக நகரில் காட்டாற்று வெள்ளம் புகுந்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளித்துவருகின்றன. அங்கு தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் இதுபோல் பல்வேறு இடங்களில் மறியல் நடந்து வருகிறது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: