திருப்பூர்,நவ.26-

திருப்பூரில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த இளம் வயது ஆண், பெண் இருவரையும் காவல் துறையைச் சேர்ந்தோர் விசாரணை என்ற பெயரில் மிரட்டி தனித்தனியாகப் பிரித்து அனுப்பி வைத்தனர். செவ்வாயன்று மாலைதிருப்பூர் கல்லூரி சாலை சௌடாம்பிகை திருமண மண்டபம் அருகே இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் இருவர் திடீரென அவர்களிடம் வந்து நின்றனர். விசாரணை செய்வதாகச் சொல்லி இருவரையும் மிரட்டிக் கொண்டிருந்தனர். அந்தசாலை வழியாகச் சென்றோர் இதை கவனித்துச் சென்றனர். சற்று நேரம் அவர்களை நிற்கவைத்து விட்டு பின்னர் அந்த இளம்பெண்ணை தனியாகச் செல்லும்படி சொல்லிவிட்டு, அவர் சென்ற பிறகு இளைஞரையும் எச்சரிக்கை என்று சொல்லி மிரட்டி அனுப்பினர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் இருவரும் யார், காதலர்களா? என்று அந்த காவலர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர், “தான் ஒரு போட்டோகிராபர் என்று சொன்னதுடன், தனது வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்கும் பெண் என்று உடனிருந்தவரை அறிமுகம் செய்திருக்கிறார். அதன் பிறகும் விடாமல், அந்த இளைஞரின் செல்போன் எண்ணைக் கேட்டுப் பெற்று அவரது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேசி, அவரது குடும்பத்தாரிடம் விசாரித்துள்ளனர். அத்துடன் உடனிருந்த பெண் அவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பதையும் அந்த குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். இருவர் சொன்ன விபரம் உறுதியான பிறகும் விடாமல், முதலில் அந்தப் பெண்ணை தனியாகப் போகும்படி சொல்லிவிட்டு, பிறகு அந்த இளைஞரையும் தனியாகப்போ! என்று மிரட்டி காவலர்கள் விரட்டியுள்ளனர். இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் கலாச்சார காவலர்களாக, இது போல் இளம்வயது ஆண், பெண் நண்பர்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசினால் கூட அவர்களை காதலர்களா என கேள்வி கேட்பது, அவர்களை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் நடந்து கொள்ளும் இந்த கலாச்சார காவலர்களைப் போல் திருப்பூர் காவலர்கள் நடந்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அத்துமீறல் நடவடிக்கையாகும். திருப்பூரில் ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் ஏராளமாக நடந்து வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை திணறி வருகிறது. அதில் கவனம் செலுத்துவதற்கு மாறாக இது போல் தன்னிச்சையாக அத்துமீறலில் ஈடுபடும் காவலர்கள் மீது மாநகர காவல் உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி சாலை பகுதியில் இச்சம்பவத்தைப் பார்த்தபொது மக்கள் வற்புறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.