சமூக அக்கறை கொண்டவரான பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான், தில்லியில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், ‘‘நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்று கூட எனது மனைவி கிரண் என்னிடம் கேட்டார்,” என்று குறிப்பிட்டிருந்தார். உடனே வழக்கம் போல் பாஜக-வினரும் அது சார்ந்த மதவாத அமைப்புகளைச் சேர்ந்தோரும் அவர் மீது பாய்ந்துள்ளனர். கண்டனம் என்ற போர்வையில் அவர் மீது வன்முறையை ஏவும் வகையில் பேசி வருகின்றனர்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யநாத் சிங், ‘யாரும் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதை தடுக்கக் கூடாது’’ என்கிறார். மற்றொரு பாஜக தலைவர்,  “உலகில் சகிப்புத்தன்மை உள்ள ஒரு நாடு இருந்தால், அதை அமீர்கான் காட்டட்டும். அந்த நாட்டிக்கு நாங்களே விசா ஏற்பாடு செய்து அவரை குடும்பத்துடன் அனுப்பி வைக்கிறோம்,’’ என்கிறார்.  சில ஆர்.எஸ்.எஸ்.  தலைவர்கள்,  “அமீர்கான் தான் விரும்பும் எந்த நாட்டுக்கும் போகலாம்’’ என்று அவரை இந்தியாவிலிருந்து துரத்தும் தொனியில் பேசுகின்றனர். நாட்டில் சகிப்பின்மை அதிகரிக்கிறது என்ற கருத்தைச் சொல்லக்கூட இந்தியக் குடிமகனுக்கு உரிமை இல்லை என்றால், இதுவே அதற்கு எடுத்துக்காட்டல்லவா?
நாடாளுமன்றத்தில் சகிப்பின்மை குறித்து விவாதிக்கத் தயார் என்று பாஜக அமைச்சர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். மறுபுறம் மென்மையாக கருத்து தெரிவித்தால் கூட அதை சகித்துக் கொள்ள முடியாமல் பாய்கிறார்கள். கான்பூரில் ஒரு வழக்குரைஞர் அமீர்கானின் கருத்து தேச விரோதமானது என்று வழக்குத் தொடுத்துள்ளார். லக்னோவில் சிவசேனா-வினர் அமீர்கானுக்கு ‘இறுதி ஊர்வலம்’ நடத்தி வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் அமீர்கான் ‘°நாப்டீல்’ இணையதள வர்த்தக நிறுவனத்தின் விளம்பர தூதர் என்பதால், “அமீர்கானை விளம்பரத்திலிருந்து நீக்கவேண்டும், இல்லையென்றால் நிறுவனத்தின் பொருட்களை வாங்கமாட்டோம்’’என்று மிரட்டுகின்றனர். இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்றும், இதைத் தெரிவிக்க எவரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும் அமீர்கான் சரியாகவே பதிலடி தந்துள்ளார்.

கடந்த தேர்தலில் பாஜக 31 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 69 சதவிகித மக்கள் இந்த அரசை ஆதரிக்காதவர்கள். தில்லி தேர்தலிலும் அண்மையில் நடந்த பீகார் தேர்தலிலும் பாஜகவை மக்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துவதற்கு இவர்களுக்கு அருகதை உண்டா? பாஜக பரிவாரத்தைப் சேர்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து விஷம் கக்கி வருகிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள பிரதமர் மோடியோ பெட்டிப் பாம்பாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியா? இந்தியாவின் மாண்பு அதன் பன்முகப் பண்பாட்டிலும் சகிப்புத்தன்மை எனும் உயரிய பண்பிலும்தான் இருக்கிறது என்பது உண்மை. அதற்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது மேலும் உண்மை. நாட்டு மக்கள் சாதி, மதம், மொழி பேதங்கள் கடந்து இந்தியர் என்ற ரீதியில்  உரத்த பதில்
சொல்வதன் மூலமே இத்தகைய பிளவு சக்திகளின் கொட்டத்தை அடக்க முடியும். சகிப்புப் பண்பாட்டைப் பாதுகாக்க முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.