திண்டுக்கல், நவ.26

balabarathiதிப்புசுல்தான் மணிமண்டப விவகாரத்தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியை அவதூறு செய்யும் இந்து மக்கள் கட்சியினர் மீது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என். பாண்டி விடுத்துள்ள அறிக்கை:-தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒரு நூற்றாண்டுக்காலம் நுழையவிடாமல் தடுத்த மிகச் சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்கள் திப்புசுல்தானும், ஹைதர் அலியும் ஆவர். அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி சட்டமன்றத்தில் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அதிமுக அரசு 110- விதியின் கீழ் மணிமண்டபம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து அரசு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இம்மணிமண்டபத்தைக் கட்டக்கூடாது என்றும்,கே.பாலபாரதி எம்எல்ஏவை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான போஸ்டர்களை இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இத்தகைய அவதூறு சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.