தருமபுரி,நவ.26-

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் குருமன்ஸ் பழங்குடிமக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சி.சொக்கலிங்கம் தலைமைவகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு எம்எல்ஏ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் குப்புசாமி, கிருஷ்ணன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும், இருளர், மலையாளி, குருமன்ஸ் போன்ற பிற பழங்குடி மக்களுக்கும் எஸ்.டி, இனச்சான்றிதழ் வழங்க வேண்டும், மத்திய மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பழங்குடியினருக்கான இடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து மலை கிராமத்துக்கும் மின்சாரம், குடிநீர், சாலைவசதி, மருத்துவம் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி டிசம்பர் 8 ம் தேதியன்று தருமபுரி, அரூர் ஆகிய ஊர்களில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள குருமன்ஸ் இனமக்களை இழிவாக பேசியும், துண்டு பிரசுரம் வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், குருமன்ஸ் பழங்குடி மக்கள்சங்கமும் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.