தமிழகத்தில் ஜனநாயகம் பின்னுக்கு தள்ளப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்குவது மேலோங்கி வருகிறது. குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தன் மீது வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளத் தயாரில்லை. மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில்கருத்துரிமையைக் கருவறுக்க முயல்கிறது. இது ஜனநாயக நடைமுறைக்கே ஆபத்தானது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழ் ஒருவிமர்சனக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக விளக்கமளிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அந்த இதழின்மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார். ஒரு வழக்கின் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முயல்வது ஒரு முதல்வருக்கு அழகல்ல.அதுமட்டுமல்ல, ஆனந்த விகடன் இதழின் முகநூல் பக்கம் கடந்த இரண்டு நாட்களாக முடக்கப் பட்டிருக்கிறது. முடக்குவதற்கு முன்பாக அந்த நிறுவனத்திடம் பேஸ்புக் நிறுவனம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. இது தானாக நடக்கிறதா? அல்லது அதிகாரத்தின் அழுத்தம் முகநூல் பக்கத்தை மூடியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் திறந்த வெளி என இணைய ஊடகம் வர்ணிக்கப்பட்டது. அதுவும் யாரின் கைகளில்இருக்கிறது என்பதை பொறுத்ததுதான் அதன் செயல்பாடு என்பது தற்போது தெளிவாகியிருக் கிறது. பிரதமருக்கு விசுவாசமாக இருக்கும் பேஸ்புக்நிறுவனம், தற்போது முதல்வருக்கும் விசுவாசமாக மாறியிருக்கிறதா என்று முகநூலில் உலாவி வரும்வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமல்ல அந்த இதழை விநியோகிக்கும் முகவர்களும் தமிழககாவலர்களால் மிரட்டப்படுகின்றனர்.

இது எதேச் சதிகார நடவடிக்கையின் உச்சம் ஆகும்.மணல் கொள்ளை குறித்து விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு, அரசை விமர் சித்து பாடிய பாடகர் கோவன் மீது, தேசப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு என பட்டியல் நீள்கிறது. பத்திரிகைகள், எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என யார் அரசை நோக்கி கேள்வி கேட்டாலும் வழக்குதான். அதே நேரத்தில் தாதுமணல் கொள்ளை, கிரா னைட் கொள்ளை, பருப்பு கொள்முதல் ஊழல், முட்டைகொள்முதல் ஊழல் என எதிலும் ஊழல்தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அது குறித்தெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதும் இல்லை, விசார ணை நடத்துவதும் இல்லை. டாஸ்மாக் கடைக்கு வரும் ’குடி’மகன்களுக்கு கைகட்டி பாதுகாப்புக் கொடுக்கும் தமிழக காவல்துறை, வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் ‘நிவாரண’ உதவி கேட்டால் விரட்டி அடிக்கிறது. இதுதான் தமிழகஅரசு கூறும் நல்லாட்சியின் லட்சணமாக இருக் கிறது. ஜனநாயகத்தின் காவலனாகக் கருதப்படும் பத்திரிகைகளின் சுதந்திரம் தமிழகத்தில் பல்வேறு வழிகளில் நசுக்கப்படுகிறது. குறிப்பாக ஆட்சியின் மீது மாற்றுக் கருத்தையோ, விமர்சனத்தையோ முன்வைத்தால், அந்த பத்திரிகைக்கான அரசு விளம்பரம்நிறுத்தப்படுகிறது. அதையும் மீறி விமர்சனங்களை முன்வைத்தால் பொய்வழக்கு, நெருக்கடி என அடக்கு முறையை ஏவி கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கிறது. மாற்றுக் கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் அரசின் கொடூரக் கரங்களுக்கு எதிராக மக்கள் தங்களது கரங்களை உயர்த்துவார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.