திருச்சிராப்பள்ளி, நவ.25-

தமிழக அரசியலில் ஒரு மகத்தான திருப்பமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்படும் என்று கூட்டணியின் தலைவர்கள் உறுதிபடக் கூறினர். மக்கள் நலக்கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் புதனன்று திருச்சியில்நடைபெற்றது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் நிறைவில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ கூறியதாவது:தமிழக அரசியலில் 1967க்குப் பின் ஒரு மகத்தான திருப்பம் 2016 சட்டமன்றத் தேர்தலில் நிலைநாட்டப்படுவது உறுதி. தொகுதி உடன்பாடு என்ற அடிப்படையில் இல்லாமல் குறைந்தபட்ச செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது.

தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக மீதுவெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணி உருவானதால் அது அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதாக சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், அது தவறான கருத்தாகும். அண்ணா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் நிரந்தரமாக கலைஞருக்கு எப்போதுமே எதிர்ப்பலை உள்ளது. இப்போது அதிமுகவுக்கும் எதிர்ப்பலை நிலவுவதால் மக்களின் வாக்குகள் எங்கள் கூட்டணிக்கு கிடைக்கவுள்ளது.இதுவரை, அதிமுகவுக்கு மாற்று திமுக; திமுவுக்கு மாற்று அதிமுக என்று இருந்த நிலை மாறி, இந்த முறை மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.குறைந்தபட்ச செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி மீது எந்த ஊழல்குற்றச்சாட்டும் கூற முடியாது. ஆனால், உ.சகாயம் அறிக்கையின்படி, ஊழல் தராசில் திமுகவும், அதிமுகவும் சரிசமமாக உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது. சகாயம் பரிந்துரைப்படி கிரானைட் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்.தமிழ்நாட்டில் மதுவினால் சொல்லொண்ணா துயரங்களும், சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன. மதுவை எதிர்ப்பதில் மக்கள் நலக் கூட்டணி முதலிடத்தில் இருக்கும். சசிபெருமாள் மறைவுக்கு பிறகு தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்கள் மத்தியில் மதுவுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது.இலங்கையில் தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக, பன்னாட்டு விசாரணை தேவை என எங்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம்.இந்த மக்கள் நலக் கூட்டணியை இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய தலைமையும் வரவேற்றுள்ளன. எதிர்வரும் டிசம்பர் 12 அன்று மதுரையில் நடைபெறவுள்ள மக்கள் நலக் கூட்டணியின் மாபெரும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி ஆகிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தில் மழை – வெள்ளத்தால் விவசாயிகள் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டும்; மக்கள் வீடுகளை இழந்தும் தத்தளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு உடனடியாக பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை.இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடிக்கு குறையாமல் வழங்க வேண்டும்.தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகையை ஊழலின்றி, கட்சிப் பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முறையாக வழங்க வேண்டும்.திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததுடன் சரிவர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.மழை – வெள்ளம் – நிவாரணம் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.தமிழகத்தில் இன்றைக்கு கருத்துச் சுதந்திரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மதுவிலக்கு கோரி போராடிய கோவன் கைது செய்யப்பட்டார். பத்திரிகை சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.இத்தகைய பின்னணியில், திமுகவும், அதிமுகவும் ஊழல் பணப் பலத்தை மட்டுமேநம்பி தேர்தலை சந்திக்க உள்ளன. ஆனால் மக்கள் நலக் கூட்டணியோ, எந்தக் கட்சியையும் சாராத 65 சதவீத மக்களை நம்பி களம் இறங்குகிறது. இன்றைய தமிழக இளைஞர்கள் நாட்டின் நலம் குறித்து விவாதிக்கின்றனர். அவர்களிடையே, மக்கள் நலக் கூட்டணி மீது கவனம் திரும்பியுள்ளது. ஈர்ப்பும் பிடிப்பும் ஏற்பட்டுள்ளது.தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்போம். இவ்வாறு வைகோ கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: