வெள்ளத் துயரத்திற்கு திமுக – அதிமுகவின் பொறுப்பற்ற ஆட்சிகளே காரணம்!
முறையாக முழு நிவாரணம் வழங்குக! அனைத்துக் கட்சிக் குழு அமைத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, நவ.24-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கியகுழு அமைத்து முழுமையான, முறையான நிவாரணம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாயன்று (24.11.2015) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தமிழ்நாட்டில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மழைதொடர்வதால் இதர மாவட்டங்களிலும் வெள்ள சேதம் ஏற்பட்டு வருகிறது.

பார்வையாளராக அரசு நிர்வாகம்

வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னறிவிப்புகள் தொடர்ந்து வந்திருந்த போதிலும் தமிழக அரசின் சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக வழக்கமாக மாவட்டங்களில் நடத்தப்படும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடைபெறவில்லை. மழை வெள்ளம் ஏற்படும் வரை அரசு நிர்வாகம் பார்வையாளராக இருந்ததன் விளைவே நாசமும், நட்டமும் பல மடங்கு அதிகரித்து மக்கள்அனைத்தையும் இழந்து கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளார்கள்.

பெரும் சேதம் – உயிரிழப்பு

பல லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல லட்சம் வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டு சாமான்கள், மின் சாதனங்கள், துணிமணிகள், நகைகள், பணம் போன்ற சொத்துக்கள், புத்தகங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் இழந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளம் – தொடர் மழையால் இரு நூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

விவசாயம் அழிவு

கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நெற்பயிர், வாழை, கரும்பு, மரவள்ளி, மணிலா, காய்கறி, கரும்பு,முந்திரி உள்ளிட்ட பல சாகுபடிகள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், மின்மோட்டார்கள் சேதமடைந்துள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் கடந்த பல நாட்கள் வேலையும், வருமானமுமின்றி பட்டினியில் வாடிக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே குறுவை சாகுபடியின்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு போக சாகுபடியும் அழிந்து விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மீனவர்கள் தொழில் பாதித்துள்ளதுடன் அவர்கள் படகுகள், வலை உள்ளிட்ட சாதனங்கள் அழிந்துள்ளன. கோழிப்பண்ணைகள், கேபிள் டிவி நிறுவனங்களது சாதனங்கள் அழிந்துள்ளன.வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல நோய்கள் பரவி மக்கள் சொல்லொண்ணா கொடுமைக்குள்ளாகியுள்ளார்கள்.

உண்மையைபிரதிபலிக்காத மதிப்பீடுகள்

ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான சேதங்களை மதிப்பிடுவதிலும், அவசர நிவாரண உதவிகளை மேற்கொள்வதிலும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை ஈடுபடுத்துவதில் அரசு அக்கறை காட்டாமல் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்குறைபாட்டினால் சேதமதிப்பீட்டின் கணக்கீடும், நிவாரணப் பணிகளும்உண்மையாக பிரதிபலிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

பேரிடருக்குகாரணம் என்ன?

இத்தகைய பேரிடர் ஏற்பட்டதை ஆய்வு செய்தால் கடந்தசில பத்தாண்டுகளாக ஏரிகள்,கண்மாய்கள், பாசன வடிகால், வாய்க்கால்களை தூர்வாரிபராமரிப்பு செய்ய தவறியதாலும், ஏரி குளங்களில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளின் தடையற்ற விற்பனையும், வசதி படைத்த பல நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் இதற்கு முக்கிய காரணங்களாகும். சென்னை நகரில் மழை நீர், கழிவு நீர் வடிகால்கள் பராமரிப்பு புறக்கணிக்கப்படுவதுடன், மக்கள் தொகைபெருக்கத்திற்கு ஏற்ப நகர விரிவாக்கத்திற்கான உரிய திட்டம் இல்லாததன் விளைவாக சென்னை நகரம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

திமுக – அதிமுக ஆட்சிகளே பொறுப்பு

பல்லாண்டுகளாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் உள்ளதிமுக – அதிமுக அரசுகள் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளை மேம்படுத்த தவறியதன்விளைவால் தான் தற்போதுமக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக! வெள்ள சேதம் மற்றும் முழுமையான நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க உடனடியாக மாநில அளவிலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் அனைத்துக் கட்சி தலைவர்களது கூட்டம் நடத்தப்பட வேண்டும். நிவாரண உதவிகளை வழங்குவதிலும் அதிகாரிகள், ஆளும் கட்சியினர் பாரபட்சமாக செயல்படுவதாகவும் – முறைகேடுகள் நடப்பதாகவும் எழுந்துள்ள புகார்களை கணக்கில் கொண்டு அனைத்துக் கட்சி குழு மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நிர்வாக அதிகாரிகளை தீர்மானிக்க வேண்டும்.

ரூ.10 ஆயிரம் கோடி வழங்குக!

தமிழக வெள்ள சேதங்களுக்கு ஒட்டுமொத்த நிதியாக மத்திய அரசு ரூ. 10,000 கோடி வழங்குவதுடன் உடனடி நிதியாக ரூ. 2000 கோடி வழங்கிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பேரிடர் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டுள்ள தொகைகள் யானைப் பசிக்கு சோளப் பொரியிட்டதை போல் உள்ளது. அதாவதுமுழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 5,000, பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 4,100/- என்பது பயனற்றதாகும். இத்தொகை வீட்டை சீரமைப்பதற்கு அறவே போதாது. வழங்கப்படும் நிவாரணத் தொகை ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதாக இருக்க வேண்டுமே தவிர கண்துடைப்பாக இருக்கக் கூடாது.

முழு இழப்பீடு வழங்குக!

எனவே முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000/-, பகுதி சேதமடைந்த வீட்டுக்கு ரூ. 20,000/- மற்றும் வீட்டு பொருட்கள், மின்சாதனங்கள், துணிமணிகள் உள்ளிட்ட இழப்புகளுக்கு இழப்பிற்கேற்ப நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். அரசு கட்டிக் கொடுத்துள்ள தொகுப்பு வீடுகள், தானே வீடுகள், பசுமை வீடுகள் மற்றும் சொந்தமாக கட்டியுள்ள ஓட்டு வீடுகளுக்கு இழப்பிற்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். இதர வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 5,000/- வழங்கிடவேண்டும். சென்னை மாநகரில் காலங்கடந்த குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.

பயிர் காப்பீடு தருக!

விவசாய பயிர் இழப்புக்கு நெல்,மரவள்ளி போன்ற விளை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000/-, கரும்பு, வாழை, சவுக்கு உள்ளிட்டபயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1.5 லட்சம் மற்றும் இதர பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும். அனைத்து விவசாய பயிர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகைக்கான பிரீமியம் அரசே செலுத்தி பயிர் காப்பீடு பெற வழி செய்ய வேண்டும்.ஆழ்குழாய் கிணறுகள், நீர்மோட்டார்கள், மண் படிந்துள்ளதை அகற்றுவது, கோழிப் பண்ணைகள், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ அரிசி மற்றும் நிவாரணமாக ரூ. 5,000/-மும், மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000/மும் சேதம் ஏற்பட்ட படகு வலைகளுக்கு முழுமையான நட்ட ஈடும் வழங்கிட வேண்டும்.உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்.தமிழக அரசு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியை சேர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் அரசுக்கு ஏற்பட்ட இழப்பைமட்டும் நிறைவேற்றிக் கொள்வதாக அமைந்திடக் கூடாது.

வெள்ளத் தடுப்பு மேலாண்மையை உறுதி செய்க!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடிக்கடி இயற்கைஇடர்பாடுகள் ஏற்படும்சூழ்நிலையில் இப்பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும், இயற்கை இடர்பாடுகளை தடுக்கும் வகையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை உருவாக்கி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.

பிரச்சனை என்ன?

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இயற்கையின் கொடையாக கிடைத்த ஏராளமான நீர் வீணே கடலில்கலந்து விட்டது. மழைக்காலங்களில் சேதம் மற்றும் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்ற இருமுனை பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றமேற்கண்ட பேரிடர் மேலாண்மை பணிகளை திட்டமிட்டு கூடுதலான நிதியினை ஒதுக்கி நிறைவேற்றுவதே இந்த பெருமழை, வெள்ளத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்பதை தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.