விருதுநகர், நவ. 24-

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சராசரியாக தினமும் சுமார் 22 முதல் 25 லட்சம் லிட்டர் வரையும், ஆனைக்குட்டம் நீர்த் தேக்கத்தில் உள்ள 13 கிணறுகள் மட்டும் தடுப்பணை மூலம் சுமார் 20 முதல் 23 லட்சம் லிட்டர் குடிநீரும் நகராட்சிக்கு வருகிறது. வரக் கூடிய தண்ணீர் 16 மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், 2 தரை தள தொட்டிகள் மூலம் 90 பிரிவுகளாக 4 நாட்களுக்கு ஒருமுறை விருதுநகர் பொதுமக்களுக்கு விநோயகம் செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துள்ளதால், நகருக்கு தேவையான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது. கோடைக்காலம் வந்து விட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனை போக்க, 1967ம் ஆண்டிலேயே அப்போதைய நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அருகே ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் கோடை கால நீர்த் தேக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நீர்த்தேக்கம், 27 அடி ஆழம் உடையது.

சுமார் 57 மில்லியன் கன அடி கொள்ளளவு வரை தண்ணீரை சேமிக்கலாம். இத்தண்ணீரை, வறட்சி மற்றும் கோடை காலங்களில் பொது மக்களுக்கு 6 மாதம் வரை விநியோகம் செய்யலாம். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகே உள்ள ஆனைக்குட்டம் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் ஏதுமின்றி, இயற்கையாக தானாக விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தரை தள தொட்டியில் விழும். பின்பு, அங்கிருந்து பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் விருதுநகரை வந்தடைகிறது. அர்ச்சுனா நதி, ஆனைக்குட்டம் வழியாக கோல்வார்பட்டி அணைக்கு செல்கிறது. இந்தநிலையில், சுக்கிரவார்பட்டி அருகே விருதுநகர் நகராட்சி மூலம், நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் முன்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் தேக்கப்படுகிறது. தேங்கிய நீரை, 3 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் பம்ப் செய்து, 3 பெரிய குழாய்கள் மூலம் மேற்படி கோடை கால நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இந்த நீரானது ஒரு நிமிடத்திற்கு 18 ஆயிரம் லிட்டர் வரை பம்பிங் செய்யப்படுகிறது. ஆனால், குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்திற்கு செல்லும் தண்ணீர் வீணாகிறது. நீரேற்று நிலையத்தில் உள்ள 2 டீசல் என்ஜின்கள் இயங்கவில்லை. இதனால், தண்ணீர் கொண்டு செல்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை கால நீர்த்தேக்கத்தின் உட் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அடந்து காணப்படுகின்றன. நீர்த்தேக்கத்தின் கரை உறுதியற்ற நிலையில் உள்ளது. நீர்த் தேக்கத்திற்கு செல்லும் சாலை, குண்டும் குழியுமாக வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால், உயர் அதிகாரிகள் கோடை கால நீர்த் தேக்கத்தை ஆய்வுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே, இப்போதே கோடை கால நீர்த் தேக்கத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். மேலும், நீரேற்று நிலையத்தில், கூடுதலாக 75 எச்.பி திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்த வேண்டும். பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.