தமிழகம் தமிழ்ப் பற்றாளர்கள் பலரை கண்டுள் ளது. வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டிருக்கிறார்கள். தமிழில் பற்பல மாற்றங்களையும் இலக்கியத்துக்கு பல்வேறுபடைப்புகளையும் தந்து செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மதப் பணிக்காக வந்து தமிழ்ப்பணி செய்தவர்கள். அவர்கள் தங்களை தமிழ்மயமாக்கி வாழ்ந்து சிறந்தார்கள். அவர்களால் தமிழும் பெருமை பெற்றது, தமிழால் அவர்களும் பெருமை பெற்றார்கள்.அண்மைக்காலமாக திருக்குறளின் புகழை நாடு முழுவதும் பரப்பப் போவதாக வடக்கேயிருந்து ஒரு குரல் அவ்வப்போது ஒலிக்கிறது. முதலில் மாநிலங்களவையில் தமிழ் மொழியை -திருக்குறளை புகழ்ந்து பேசுவதில் துவங்கியது. அதன் பெயரால் ஒரு பயணம் குமரி முனையிலிருந்து துவங்கி சென் னையில் ஒரு சிலரை வைத்து ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தற்போது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மதுரையில் நடத்தி அதில் வெற்றி பெற்ற 133 மாணவர்களுக்கு புதுதில்லியில் நாடாளுமன்ற அரங்கில் பாராட்டு விழா நடக்கப் போகிறதாம். இதையெல்லாம் செய்வது யார்? உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய். இவர்ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான பாஞ்சஜன்யாவில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு நாட்டின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஏதாவது செய்து செல்வாக்கை ஏற்படுத்த- சிறப்புப் பணி கொடுத்து அனுப்பியிருக்கிறது ஆர்எஸ்எஸ். அதன் கட்டளையை சிரமேற்கொண்டு நடத்த அவரும் பலவகைகளில் பல வழிகளில் முயற் சித்துக் கொண்டிருக்கிறார்.அதற்காக திருவள்ளுவருக்கான மாணவர்கள், இளைஞர்கள் மன்றத்தை உருவாக்கியுள்ளாராம். அதன் பெயரில் மதுரையில் நவம்பர் ஒன்றாம் நாளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டதாம். இதுபற்றி அவரே கூறுவதென்ன? இதில் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களில் 133 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றுரைத்த-பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்று பாருக்கெல்லாம் பறைசாற்றிய திருவள்ளுவரின் பெயரால்‘சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச்’ சேர்ந்தவர்களுக்குப் போட்டியாம். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பார்களே, அது இதுதான்போலும்.தமிழகத்தில் ஏற்கனவே பாஜகவின் தேசியத்தலைவர் அமித் ஷா, வெங்கய்ய நாயுடு போன்றவர்கள் வந்து சாதி வாரியாக வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் கட்சிக்கு ஆட்களைச் சேர்க்கவும் ஆதரவைத் திரட்டவும். அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக ஒரு பிரிவு வேலை செய்தால் இலக்கிய ரீதி யாக, பண்பாட்டு ரீதியாக ஒதுக்கப்பட்ட சிறப்புப் பணிக்கு தருண் விஜய் தமிழால் முயற்சிக்கிறார். தமிழை வளர்ப்பது இவரது உண்மையான நோக்கமாக இருந்தால் செம்மொழியான தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப – வளர்க்க நினைத்தால் சமஸ்கிருத ஆண்டு கொண்டாடுவது போல தமிழ்மொழி ஆண்டு கொண்டாட குரல் கொடுக்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப் போகும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானியைக் கொண்டு அடுத்த ஆண்டே தமிழ்மொழி ஆண்டு என அறிவிக்கச் செய்யலாம். ஆனால் இவர்கள் செய்வது எல்லாம் ‘விளக்குப் பொறி’ போன்ற கவர்ந்து இழுக்கும் காரியங்கள் தானே. பசப்பு மொழி பேசுபவர்கள் உண்மையான பாசக்காரர்கள் அல்ல; பாஜக-காரர்கள் மெய்யான தமிழ்ப் பற்றாளர்கள் அல்ல என்பதை தமிழ்கூறும் நல்லுலகு ஒரு போதும் மறவாது.

Leave A Reply