நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது. பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களின் ஊழல், முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்சனைக்கு ஆளும் கட்சி தரப்பில் முறையான பதிலளிக்காததால் கூட்டத்தொட ரின் பெரும் பகுதி முடக்கப்பட்டது. மோடி அரசைப் பொறுத்தவரை இவ்வாறு நாடாளுமன்றம் முடங்குவதே நல்லது என்று கருதுகிறது. ஆளும் கட்சி விரும்புவதை அவசரச்சட்டம் என்ற கொல்லைப்புறம் வழியாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது அவர்களது நினைப்பு.

உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மூன்று முறைமோடி அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது. குடியரசுத் தலைவரும் சளைக்காமல் கையெழுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். இத்தகைய அணுகுமுறை தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. மதவெறி சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மோடி அரசு கொண்டு வர விரும்பும் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாநிலங்களவை தற்போது முட்டுக்கட்டையாக உள்ளது.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலங்களவையில் பலத்தை பெருக்கிக் கொண்டு அதன் மூலம் விரும்பும் மசோதாக் களையெல்லாம் சட்டமாக்கிவிடலாம் என்று பாஜக மனப்பால் குடித்தது. ஆனால் பீகார் மக்கள் அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள்.இதனால் ஆத்திரமடைந்துள்ள மத்திய ஆட்சியாளர்கள் மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை சிதைக்க முயலக் கூடும். மதச்சார்பின்மை கோட் பாடு தங்களுக்கு இடையூறாக இருப்பதால் அரசியல்சாசனத்திலிருந்தே அந்த வார்த்தையை நீக்க முயன்றவர்கள்தான் இவர்கள்.மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சட்டங்களை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் மூலம் நிறைவேற்றும் வழக்கம் உள்ளது.

ஆனால் அடிக்கடி இந்த வழியை பயன்படுத்த முடியாது. ஆகவே தான் பாஜக கூட்டணி அரசு தயங்குகிறது. ஆகவே முக்கியமான மசோதாக்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லாமல் தடுக்க முடியுமா என்பதற்கான வாய்ப்புக்களையும் மோடி அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதற்காக மக்களால் நேரடியாக தேர்வு செய்யப் பட்ட மக்களவையை விட கொல்லைப்புற வழியாக தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை அதிகாரம் மிக்கதா? என்ற கேள்வியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கெனவே எழுப்பியுள்ளார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துதான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இருந்தபோதும் தாங்கள் விரும்பும் சட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களவை தடையாக இருப்பதால் எரிச்சலில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.மாநிலங்களவை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட் டது.

சமீப காலமாக முதலாளிகள் சிலர் அரசியல் கட்சிகளை வளைத்து இந்த அவைக்கு வந்துவிட்ட போதும், இந்த அவை என்பது பல சமயங்களில் ஆட்சியாளர்களின் எதேச் சதிகார திட்டங்களுக்கு கடிவாளம் போடுவதாக அமைந்துள்ளது என்பதை மறந்துவிடலாகாது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து இப்போதே இந்தப் பிரச்சனையை எழுப்பக்கூடாது என்று பாஜகவினர் கூறத் துவங்கிவிட்டனர்.விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் மதவெறி நடவடிக்கைகள்அத்துமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று மோடி அரசை கேள்வி கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: