திருச்சி, நவ. 22-

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏரி, குளங்களை காணவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு குற்றம் சாட்டினார். திருச்சி மாவட்டம் உறையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த 7வது ஊதிய உயர்வு குழுவின் பரிந்துரை ஊழியர்களுக்கு திருப்திகரமாக இல்லை. ஊழியர்களின் கோரிக்கைகள் பலவற்றை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து அடுத்த மாதம் 8ந் தேதி புதுதில்லியில் மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொள்வோம் என்றார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மத்திய அரசு பார்வையிட்டு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். மாநில அரசும் எவ்வித பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தமிழகத்திலிருந்த 39 ஆயிரம் ஏரி,குளங்களில் 5 ஆயிரம் ஏரி, குளங்கள் தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது என்றும் நல்லக்கண்ணு குற்றம் சாட்டினார்.

மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட்காரர்களின் அத்துமீறல் தான் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட காரணம். வெறும் புயல் இல்லாமல் மழைக்கே தமிழகம் தாங்க முடியாத பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply