விவசாயத்தை அழிக்கும் துரியோதனன் மோடி
விவசாயிகள் சங்கங்கள் கடும் கண்டனம்

புதுதில்லி, நவ.22 –

விவசாயத்தில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒரு துரியோதனனாக செயல்படுகிறார். இத்திட்டத்தை எதிர்த்து விவசாய மகாபாரதப் போர் நடத்த வேண்டியுள்ளது என்று விவசாய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் பூமி அதிகார் அந்தோலன் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளன.

அந்த அறிக்கைகளில் கூறியுள்ளதாவது :மோடி 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் விவசாயிகளுக்கு கற்பனைக்கெட்டாத பயங்கரங்கள் ஏற்படும். ஏன் மோடி ஒரு துரியோதனன் போன்று செயல்படுகிறார்? விவசாயிகள் தங்களுக்கு `நல்ல நாட்கள்’ வரும் என்று மோடியின் பேச்சை நம்பி அவருக்கு வாக்களித்தவர்கள். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் மதுரா பகுதி விவசாயிகள். ஆனால் இன்று அவர்கள் மோடி அரசின் மீது கடுங்கோபம் கொண்டுள்ளனர். மோடி அரசு முதலில் கொண்டு வந்த நிலப்பறிப்பு மசோதா, நிலங்களை எடுத்துக்கொள்ள விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது. விவசாயிகள் அச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து மசோதவை திரும்பப் பெற வைத்தனர். ஆனால் விவசாயிகள் பெற்ற போராட்ட வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. அதற்குள் மோடி அரசு விவசாயத்தில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதன் மூலம் அச்சட்ட மசோதா செய்த அதே வேலையை, அதாவது மறைமுகமாக நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க அனுமதித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசு பிடிவாதமாக கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்க்கும் முடிவில் இருப்பது தெரிய வருகிறது. எனவே துரியோதனனாக செயல்படும் மோடியை எதிர்த்து ஒரு விவசாய மகாபாரதப்போர் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.விவசாயத்தில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்பது மிக கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இது பன்னாட்டு மூலதனம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவ வழி வகுக்கும். அது நிறுவனமயமாக்கப்பட்ட ஊடுருவலாக இருக்கும். இது கொள்கை வழியிலான நெருக்கடியாக இருக்கும்.விவசாயத்தில் அந்நிய நேரடி மூலதனம் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவே இருக்கும். அது நிச்சயம் சிறு குறு விவசாயிகளை அழித்துவிடும் என்பதே மூன்றாம் உலக நாடுகளின் அனுபவம் ஆகும்.நியூயார்க் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ரித்திகா சிரிமாலி என்ற ஆராய்ச்சியாளர், பஞ்சாபில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் விவசாயத்தை ஆராய்ச்சி செய்து வருபவர். விவசாயத்தில் அந்நிய நேரடி மூலதனம் விவசாயம் கார்ப்பரேட்மயமாவதை நோக்கி வழிவகுக்கும் என்று கூறுகிறார். மேலும் அவர் கூறியுள்ளதாவது :அந்நிய நேரடி முதலீடு முதலில் ஒப்பந்த விவசாயமாக உருவாக்கப்படும்.

இந்த ஒப்பந்த விவசாயம் விவசாயிகளுக்கும் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கும் இடையில் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். இதன்படி வேளாண்மை கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரிக்கும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை விவசாயி வாங்கிக் கொள்ள வேண்டும். விவசாயிகள் கம்பெனியின் ஒப்பந்தத்தில் கூறிய பயிர்களை மட்டும் விவசாயம் செய்ய வேண்டும்.

அப்போது மட்டுமே ஒப்பந்தப்படி அந்த கம்பெனிகள் விவசாயிகள் செய்த உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளும். இது முழுக்க நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கும் செயலாகும்.இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.