தேனி, நவ.22-

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்தாண்டும் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர் மழையால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.

ஞாயிறு காலை அணையின் நீர்மட்டம் 135.40 அடி. அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி வருகிறது. விநாடிக்கு 5 ஆயிரத்து 967 கன அடி நீர் அணைக்கு வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து தமிழக பாசனத்துக்காக விநாடிக்கு 511 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.வைகை அணையின் நீர்மட்டம் 63.85 அடி. அணைக்கு 2,854 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மழையளவு (மில்லி மீட்டரில்)

பெரியாறு-5, தேக்கடி-2.4, வைகை அணை-5.2., வீரபாண்டி-8, உத்தமபாளையம்-2.4, சோத்துப்பாறை-4, பெரியகுளம்-7, மஞ்சளாறு-3, கூடலூர்-2.2, அரண்மனைபுதூர்-3, ஆண்டிபட்டி-7.4.

Leave A Reply