பேராசிரியர் ஜயந்த் நர்லிகர் புனேயில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வானவியல், வான்இயற்பியல் மையத்தின் (IUCAA) நிறுவன இயக்குநர். அவரது வழிகாட்டுதலின் கீழ் வானவியல், வான் இயற்பியல் துறைகளில் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் ஐயுசிஏஏ தலைசிறந்த நிறுவனம் என உலக அளவில் பெயர் பெற்றுள்ளது.

அவரது புத்தகங்கள், கட்டுரைகள், ரேடியோ/ டிவி நிகழ்ச்சிகள் மூலமாக நர்லிகர் ஒரு பிரபலமான அறிவியல் தகவல் தொடர்பாளராக மக்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். யுனெஸ்கோவின் கலிங்கா விருது, மத்திய அரசின் பத்ம பூஷன் விருது, பட்நாகர் விருது போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

சயன்ஸ் ரிப்போர்ட்டருக்காக மனிஷ் மோகன் கோரே அவருடன் நடத்திய நேர்காணலில் நர்லிகர் நம்முடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். “அதிகம் படிப்பறிவில்லாத சாமானியர்களுக்கும் அறிவியல் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவர்களிடம் அத்தகவல்களைக் கொண்டு செல்வது ஒரு சுவாரசியமான அனுபவம். அதன் காரணமாகவே அறிவியலை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது” என்கிறார் நர்லிகர். “அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி விஞ்ஞானிகள் எழுதினால் அதில் நம்பகத்தன்மை கூடுதலாக இருக்கும். ஆனால் அவர்களோ இதற்கெல்லாம் நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கின்றனர்.

ஒரு சாமானியனின் தளத்திற்கு இறங்கிவந்து பேச முடியுமாவென்ற தயக்கமும் அவர்களிடம் இருக்கிறது. மதம், பண்பாடு, சாதி, மொழி என பல்வேறுவிதமாகப் பிரிந்துகிடக்கும் நம் இந்திய சமூகத்தில் – பாரம்பரியமான பல பழக்கவழக்கங்கள் ஊறிப்போயுள்ள நம் சமூகத்தில் – அறிவியல் பார்வையை மக்களிடையே கொண்டுசெல்வது சாத்தியமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கலாம். ஆனால் அது சரியல்ல. என்னதான் பாரம்பரியப் பழக்கவழக்கங்களுடன் மக்கள் வளர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களின் ஆழ்மனதில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மனிதர்களின் வாழ்க்கை அமைகிறது என்ற சோதிடப் பார்வை மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. கிரகங்களுக்கு மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி இருப்பதாக கிரேக்கர்கள் நம்பினர். அவர்களிடமிருந்து இந்த நம்பிக்கை இந்தியாவுக்கு வந்தது. பின்னர் கிரகங்களின் சஞ்சாரத்திற்கு புவிஈர்ப்புவிசைதான் உண்மையான காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். கிரகங்களின் இருப்பிடங்களைத் துல்லியமாக முன்னதாகவே தெரிந்துகொள்ள மட்டுமல்ல, மங்கள்யான் போன்ற விண்கலங்களை அனுப்பி அந்த கிரகங்களை ஆய்வு செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று சோதிட நம்பிக்கை தவறானது என நிரூபிப்பது இன்றையத் தேவை.

இதைச் சாதிப்பதற்கு ஆண்டுகள் பல ஆகும் என்பது உண்மை. ஆனால் பல்வேறு முனைகளிலிருந்து மக்களைச் சென்றடையும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். பயிற்சிப் பட்டறைகள், பயிற்சிப் பள்ளிகள், ஊடகங்களுடன் தொடர்பு, அரசுசாரா அமைப்புகள், அறிவியல் இயக்கங்கள் எனப் பல்வேறு சாதனங்கள் மூலம் அறிவியலைப் பிரபலமாக்குவதோடு அறிவியல் புனைகதைகளையும் கூட இந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தலாம். ஒரு முறை விமானநிலையத்திற்கு வந்தபிறகு இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் எனத் தெரிந்தவுடன் `அந்த இரண்டு மணி நேரம் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரம்’ என எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் அறிவியல் புனைகதை ஒன்றினை எழுதினேன். புரிந்துகொள்ள அதிக சிரமம் இன்றி அறிவியல் சாதாரண மக்களைச் சென்றடைய புனைகதை வடிவம் பெரிதும் உதவும்.

பள்ளிகளில் அறிவியலைப் போதிப்பதும் சரியான முறையில் இல்லை. தேர்வுக்காக மனப்பாடம் செய்து தேர்வு முடிந்தவுடன் மறந்துவிடுவது அறிவியல் அல்ல. புனேயில் உள்ள அறிவியல் கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான நிறுவனம் ( IISER), விஞ்ஞான் பிரசார் போன்ற நிறுவனங்கள் சரியான திசையில் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்” எனத் தன் பேட்டியை முடிக்கிறார் ஜயந்த் நர்லிகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.