மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்.

நவம்பர் 13 அன்று வெள்ளிக்கிழமை இரவு, வெடிகுண்டு பெல்ட்டுகளை அணிந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் புகுந்து அங்கு இசை நிகழ்ச்சியிலும் மற்றும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்த அப்பாவி மக்கள் 129 பேரை கொன்று குவித்துள்ளனர். மேலும் நகரில் ஆறு இடங்களில் 99 பேரை காயப்படுத்தியும் இருக்கிறார்கள். இறந்தவர்களில் மிகுதியானவர்கள் இளைஞர்களும், பெண்களுமாவார்கள்.
மிகவும் காட்டுமிராண்டித்தனமான இக்கொலைபாதகக் குற்றங்கள், ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையமாக விளங்கும் பிரான்சின் தலைநகரான பாரீசில் நடைபெற்றிருக்கிறது. இதே வாரத்தில் வேறு சில பயங்கரவாதத் தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன.

* பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் 43 பேர்,
* பாக்தாத்தில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர்,
* எகிப்தின் ஷராம் எல் ஷேக் என்னுமிடத்திலிருந்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிற்குச்        சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டு விமானத்திலிருந்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல்கள் அனைத்துமே அரேபிய மொழியில் டயேஷ் (Daesh)) எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டிருக்கின்றன.உலகம் மிகப்பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது, இத்தகைய அச்சுறுத்தல் எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும் என்பதிலும் எவருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், இந்தப் பயங்கரவாதத்திற்கான ஊற்று எது என்பதை அடையாளம் கண்டு, அதனை முழுமையாக அடைத்திடத் தேவையான கொள்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றினால்தான் அதனை முறியடித்திட முடியும். இங்கேதான் பிரச்சனை அடங்கி இருக்கிறது. இவை தொடர்பாக மேற்கத்திய நாடுகளுக்கு சில உண்மைகளைச் சுட்டிக்காட்டினோமானால், அவர்களுக்கு நம்மீது ஆத்திரம் வருகிறது.

யாருக்கு எதிராக யுத்தம்?

பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹாலண்டே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப்பின்னர், பிரான்° யுத்தத்தில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார். நமது கேள்வி என்னவெனில், யாருக்கு எதிரான யுத்தம் இது? இதற்கு வெளிப்படையான பதில், இராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இயங்கிக் கொண்டிருக்கிற ஐஎஸ்ஐஎஸ் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரானது என்றே சொல்வார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. பிரான்ஸ் யுத்தம் தொடுத்தால் சிரியா மற்றும் இராக்கின் சில வயல்வெளிகள் பாழாகும் என்பதைத் தவிர வேறெதுவும் நடந்துவிடப் போவதில்லை.

அமெரிக்காவின் தலைமையில் மேற்கத்திய வல்லரசு நாடுகள் இராக் மற்றும் சிரியா குறித்து பின்பற்றிய கொள்கைகளும், அவற்றின் மீதான ராணுவத் தலையீடுகளும்தான் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு ஊற்றுக்கண்களாகும்.

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் எப்படி வந்தார்கள்?

சதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு இராக்கைத் தாக்கியது அமெரிக்கா. சதாம் உசேன் அல் கொய்தா இயக்கத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறார் என்று பொய்க் குற்றஞ்சாட்டி அமெரிக்க ஜனாதிபதி புஷ் யுத்தம் தொடுத்தார். ஆனால் உண்மையில், அமெரிக்க ஆக்கிரமிப்பின் காரணமாகவும், அங்கே இருந்த மதச்சார்பற்ற அரசை அழித்ததன் காரணமாகவும்தான் அல் கொய்தா இயக்கமே இராக்கில் தோன்றியது. இப்போது அந்த அல்கொய்தா இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக உருமாறியிருக்கிறது. பிரான்ஸ் செய்த அட்டூழியங்கள் சிரியாவில், ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் மதச்சார்பற்ற ஆட்சியைத் தூக்கி எறிவதற்காக அமெரிக்கா பயன்படுத்திய நேட்டோ படைகளில் பிரான்ஸ் தான் முன்னணி நாடாக இருந்திருக்கிறது. 2011-12 இலிருந்து, அசாத்தை எதிர்த்துவந்த ஆயுதமேந்திய கலகக் கும்பல்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்து வருகிறது. சிரியா, பிரான்சின் முன்னாள் காலனி நாடாகும். சிரியாவில் சவூதி அரேபியா மற்றும் சில அரபு நாடுகளின் ஆதரவுடன் இயங்கி வந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கும் நிதி மற்றும் ஆயுதங்களை பிரான்ஸ் வழங்கியது.

அதுமட்டுமல்ல, மற்றொரு நேட்டோ கூட்டாளி நாடான துருக்கியுடனும் ரகசியமாக உறவு கொண்டு, அதன் எல்லைகள் வழியே, ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை சிரியாவுக்குள் அனுப்புவதற்கு வசதி செய்து கொடுத்தது பிரான்ஸ். தீவிரவாதப் பாதையில் சென்ற சில பிரெஞ்சு முஸ்லீம் பிரஜைகள் சிரியாவிற்கு, அசாத் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்காக சென்றபோது, பிரான்ஸ் அரசாங்கம் மிகவும் நேர்மையற்ற முறையில் கண்டுகொள்ளாமல் இருந்தது. பிரான்சைப் பொறுத்தவரை, அமெரிக்க தலைமையிலான கூட்டணி போன்றே, அசாத்தையும் அவரது ஆட்சியையும் வீழ்த்துவதற்குத்தான் முன்னுரிமை அளித்தது. அதற்காக மத அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிரான்ஸ் தயங்கவில்லை.

அமெரிக்க-பிரெஞ்சு-நேட்டோ தலையீடுகள்

சிரியா என்ற நாட்டையே நாசமாக்கியுள்ளது உள்நாட்டு யுத்தம். சிரியாவின் அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் உருவாவதற்கான சூழ்நிலை, வடக்கு இராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை உள்ளடக்கி ஓர் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஐஎஸ்ஐஎஸ் என்ற அரக்கன் உருவாவதற்கு அமெரிக்க-பிரெஞ்சு-நேட்டோ தலையீடுகள்தான் முக்கிய காரணமாகும். அதுதான் இப்போது இவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது. இப்போது, ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறி சிரியா மீது வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்காவும், பிரான்சும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் அமெரிக்காவும், பிரான்சும்தான் இங்கே ஆரம்பத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் அளித்து உருவாக்கிய ஜபாத் அல்-நுஷ்ரா மற்றும் இதர இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஆதரித்தன.சிரியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற ஒன்று இருப்பதையோ, சிரியாவை காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத இயக்கங்களுக்கு அடித்தளமாக மாற்றிட முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராகவும் இதர இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராகவும் சிரிய ராணுவம் போராடிக் கொண்டிருப்பதையோ மேற்கத்திய நாடுகள் பார்க்க மறுக்கின்றன.

மனிதத்துயரம் சமீபத்திய நிகழ்ச்சிப்போக்குகள் காரணமாகத்தான் இந்தப் பார்வையில் மாற்றம் ஏற்படத் துவங்கி இருக்கிறது. முதலாவதாக, கடந்த சில மாதங்களாக சிரியாவிலிருந்தும், இராக்கிலிருந்தும் ஐரோப்பாவிற்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தார்கள். யுத்தத்தின் பயங்கரத்திலிருந்தும், தீவிரவாதிகளால் கொல்லப்படுவதிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். இது மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனையை ஐரோப்பாவின் இதயத்திற்குள் நேரடியாகக் கொண்டு வந்துவிட்டது. இந்த மனிதத் துயரம் நிறுத்தப்படவேண்டுமானால், சிரியாவில் நடைபெறும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்கிற முடிவிற்கு ஐரோப்பிய யூனியன் இப்போது வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உறுதிமிக்க தலையீடு

இரண்டாவது மிகப்பெரிய நிகழ்ச்சிப்போக்கு என்பது, ரஷ்ய ஜனாதிபதி புடின் எடுத்துள்ள முடிவாகும். சிரிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக ரஷ்யா ராணுவரீதியாகத் தலையிடும் என்று அவர் அறிவித்தார். ரஷ்ய விமானப்படை ஐஎஸ் இயக்கத்தினரையும் இதர தீவிரவாதக் குழுக்களையும் தாக்கத் தொடங்கிவிட்டது. ரஷ்யத் தலையீடானது நிலைமையில் ஒரு குணாம்சரீதியான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பயங்கரவாதிகளை எதிர்த்துப்போரிடும் சிரிய அரசாங்கத்திற்கும், அதன் படையினருக்கும் ஊக்கத்தையும் வல்லமையையும் அளித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அசாத் அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை என்கிற கட்டாயத்திற்கு மேற்கத்திய நாடுகள் வந்துவிட்டன.

அரசியல் தீர்வின் அவசியம்

மூன்றாவது காரணி, எகிப்திலிருந்து சென்ற ரஷ்ய விமானம் தகர்க்கப்பட்டதும், பாரீஸ் தாக்குதல்களும் ஆகும். சிரியா பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்கான அவசரத்தை இவ்விரண்டும் கொண்டு வந்திருக்கின்றன. அமெ. கூட்டணியிடம் மாற்றம் தேவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் சிரியாவில் உள்ள ஐஎஸ் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. ஆனால் இதனால் மட்டும் ஐஎஸ் அமைப்பைத் தோற்கடித்துவிட முடியாது. தேவைப்படுவது என்னவெனில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற அதன் கூட்டணி நாடுகளின் மனதில் மாற்றம் வர வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் அனைத்துப் பிராந்தியங்களிலும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்து வந்த சவூதி அரேபியா போன்ற படுபிற்போக்கான நாடுகளை ஆதரித்து வந்தன. அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை அபகரித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, அரபு நாடுகளில் உருவான மதச்சார்பற்ற அரசுகளைத் தாக்குவதை அவை இலக்குகளாகக் கொண்டிருந்தன. இவற்றின் தலையீடுகளால்தான் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான், இராக் மற்றும் சிரியாவில் அல் கொய்தா மற்றும் ஐஎஸ் இயக்கங்கள் உருவாகின.

எனவே, மேற்படி அமெரிக்கக் கூட்டணியானது முதல் நடவடிக்கையாக, சிரியாவில் அசாத் அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்கிற இலக்கை கைவிட வேண்டும். பிரான்ஸ் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹாலண்டே பேசுகையில், அசாத் அரசாங்கம் பிரச்சனை அல்ல என்றும், பிரதான எதிரி ஐஎஸ் இயக்கமே என்றும் கூறியிருக்கிறார்.

இன்றைய தேவை என்ன?

ஐஎஸ் இயக்கத்தைத் தனிமைப்படுத்தி, தோற்கடித்திட ஓர் ஒன்றுபட்ட போர்த்தந்திரம் தேவை. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகியவை மறைமுகமாக சிரியாவிற்குள் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராட, ரஷ்யா மற்றும் ஈரானுடன் அவை கை கோர்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதன் மூலம் தங்கள் நாட்டின் எதிர்கால அரசியல் அமைப்பை சிரியா மக்களே தீர்மானித்திட முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழில்: ச. வீரமணி

Leave A Reply

%d bloggers like this: