தமிழ் நிலம் அன்று பல்வேறு அரசர்களின் ஆட்சிப் பரப்பின் வழியும், குறுநில அரசர்களின் சிறு ஆட்சிப் பரப்பு எல்லைகளின் வழியும் பாகுபாடு செய்யப்பட்டிருந்தாலும் அவை எப்பொழுதும் நிரந்தரமானவையாக இல்லை. படையெடுப்புகள் மூலம் அவ்வெல்லைகள் மாறிக் கொண்டே இருந்தன. இதனால் தமிழ் நிலத்தை இயற்கை அடிப்படையில் பாகுபாடு செய்து, திணை அடிப்படையில் எழுதினால் அது பொதுமையானதாக இருக்கும் எனக் கருதி புலவர்கள் பாடல்களை எழுதினார்களோ என்று கூட நாம் கருத வேண்டியுள்ளது.

மாறாக, பிற்காலத்தில் சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்தவர்களே அதற்கு திணை, துறைகளை வகைபாடு செய்து பிரித்தார்கள். ஒவ்வொரு பாடலிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிலம், பூ, மரம், மக்கள், விலங்கு முதலான காரணிகளைக் கொண்டே அதற்குத் திணை வகைப்பாடு செய்யப்பட்டது.

குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் முதலான பத்துப்பாட்டில் அமைந்துள்ள நூல்களுக்கானப் பெயர்கள் யாவும் எழுதிய புலவர்களாலேயேக் கொடுக்கப்பட்டது, தொகுத்தவர்களால் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.

இம்மரபை அடியொட்டியே பிற்காலத்தில் சங்கப் பாடல்களைத் தொகுத்த தொகுப்பாளர்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலான தொகைச் செய்யப்பட்ட பாடல்களுக்குத் திணையினை அடிப்படையாகக் கொண்டு தொகுத்துப் பெயரிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

இவ்வாறாக சங்கப் பாடல்களைத் தொகுப்பதற்கு நில அமைப்பானது ஓர் அடிப்படை அலகாகப் பயன்படுத்தப்பட்டது.

பல்வேறு தன்மைகளை உள்ளடக்கிய நிலத்தினைக் காப்பது அரசனின் முதற் கடமையாகும். இதுவே பேராண்மையாகப் போற்றப்பட்டது. நிலங்களை எதிரி நாட்டு அரசர்களிடம் இழப்பது மீண்டும் அதனை மீட்பது அல்லது போரில் மாண்டுபோவது முதலான நடைமுறைகள் குறுநில அரசர்கள் முதல் பேரரசர்கள் வரை விதிகளாக இருந்தன. நிலைமை இவ்வாறு இருக்க, கடலால் பாண்டிய அரசனின் நிலம் அபகரிக்கப்பட்டுவிட்டது. கடல்கோளால் அவன் ஆட்சிப் பரப்பு விழுங்கப்பட்டது. கடலையா எதிர்த்து அவ்வரசன் போராட முடியும்? இதற்கு பாண்டியன் ஒரு திட்டம் வகுத்தான். கடலில் இழந்த தன் நிலத்திற்கு ஈடாக சேர, சோழ அரசர்களின் நாட்டின் மீது படையெடுத்து அவர்களின் நிலங்களைக் கைப்பற்றி தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டான். இதனைக் கலித்தொகை 104 பாடல், குறிப்பிடுகின்றது,

மலிதிரை யூர்ந்துந்த மன்கடல் வெளவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம்படிப்

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த

                                                                                                           கிளர்கொண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்.

இதன் மூலம் பாண்டிய அரசனின் ஆட்சிப் பரப்பு வரைபடம் மாற்றம் பெற்றது. சேர, சோழர்களின் ஆட்சிப் பரப்போ சுருங்கியது. மேலும், ‘நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்’ (அகநானூறு. பாடல் 65) என்ற தொடர் மூலம் உதியஞ் சேரலாதன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினான் என்பதை அறிய முடிகின்றது. இப்படியாக கடல்கோள்களும் படையெடுப்புகளும் தமிழக ஆட்சியாளர்களின் எல்லைப் பகுதி, ஆட்சிப் பரப்பு முதலான வரைபடங்களை அடிக்கடி மாற்றியமைத்தன. இதனைப் பாடல்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் அன்றையப் புலவர்கள் இருந்தனர். இந்தப் பின்புலத்திலேயே கலித்தொகைப் பாடல் பதிவினைப் பார்க்கலாம்.

கடல்கோள், பருவநிலை மாற்றம் அது சார்ந்து உருவாகும் தட்பவெப்ப நிலைமாற்றங்கள் முதலானவை தமிழ் நில அமைப்பை பாதித்தன. மழை, கார், கோடை, வறட்சி முதலானவை தமிழ் நிலத்தின் விளைச்சலையும் மக்களின் வாழ்நிலையையும் தீர்மானித்தன. பொருள் தேடி தலைவன் செல்லும் காலம் கோடையாகவும், வீடு திரும்பும் காலம் கார்காலமாகவும் இதனால் தான் சங்கப் பாடல்கள் பதிவு செய்கின்றன. கடலின் தன்மைக்கும் பருவக்காற்றுக்கும் முக்கியமான தொடர்பு இருந்தது.

கடல் வெள்ளம், மழை, காட்டாறுகள் முதலானவை நிலவரைபடத்தை அடிக்கடி மாற்றும் இயல்புடையன. இதற்கு நல்ல சான்றாக பாலாற்றைக் கூறலாம். பாலாறு தம் வழித்தடத்தை இருமுறை மாற்றியபடியே பாய்ந்தோடியுள்ளது. இதனை செயற்கைக்கோள் ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது. மேலும் கொற்றலையாற்றுப் (கொசஸ்தலையாறு ) பள்ளத்தாக்குப் பகுதி சுமார் 5,000 முதல் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாலாறு ஓடிய பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு ஓடிய அவ்வாறானது பழவேற்காட்டுப் பகுதியில் கடலில் கலந்திருக்க வேண்டும். ஆனால் இன்று பாலாறு செங்கல்பட்டு வழியாக ஓடி சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கின்றது. வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய நகரங்கள் பாலாற்றங்கரை நாகரிகத்தின் தொடர்ச்சியால் உருவான நகரங்களே ஆகும். கடல்கள் நிலத்தை விழுங்குவதாலும், ஆறுகள் நிலத்தை அரித்துச் சென்று புதிய சமவெளிகளை தோற்றுவிப்பதாலும் புதிய புதிய நில வரைபடங்கள் உருவாகின்றன. ‘ஆற்றுப் படுகைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டில்’ என்பதற்கு ஏற்ப அன்றைய பாலாற்றுப் படுகையில் சங்ககால மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தமைக்கான எச்சங்கள் பல கிடைக்கின்றன. வேளிர்கள் முதல் பல்வேறு இனக்குழு மக்களும் மேலும் வேட்டைச் சமூகத்தைச் சார்ந்த கற்கால மனிதர்களும் இப்பாலாற்றுப் படுகையில் வளமாக வாழ்ந்துள்ளனர்.

ஆற்றுப்படுகைகளை ஒட்டி மனிதனால் உருவாக்கப்பட்ட மருத நிலமானது அவன் வாழ்வதற்காக செயற்கையாக ஒழுங்குபடுத்தப்பட்ட புதிய நில அமைப்பாகும். இயற்கையாய் அமைந்த நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை முதலான நிலங்களைவிட மனிதனால் ஒழுங்குபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட மருத நிலம் நிலையாக ஓர் இடத்தில் மனிதன் வாழ்வதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். மருத நிலம் மனித நாகரிகத்தின் அடையாளமாகும். முல்லை நிலக் காடுகளை அழித்து நீர்நிலை ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி வாழிடம், வேளாண்மை, கால்நடை மேய்ச்சலுக்கான புல்வெளி என்ற பிரிவுகளில் உருவான ஒரு நில அமைப்பே மருதமாகும்.

காடு கொன்று நாடாக்கிக்

குளந்தொட்டு வளம்பெருக்கி   (பட்டினப்பாலை. 283-284)

என்ற தொடர் மருத நில உருவாக்கத்திற்கு கரிகால் சோழன் அளித்த முக்கியத்துவத்தைப் பதிவு செய்கின்றது. இப்படித்தான் அன்று ஒவ்வொரு அரசர்களும் ‘காட்டைக் கொன்று அதனை மருநில நாடாக்கினர்’ என்பது கவனிக்கத்தக்கது.

ஆறு முதலான நீர்நிலைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மை அது சார்ந்து பரந்த அளவில் உருவாக்கப்பட்ட மருத நில வாழ்க்கை முறை, கலைகளின் வளர்ச்சி, நிலம் சார்ந்த பண்பாடு முதலியன மனித நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. மருத நிலத்தில் உருவாக்கப்பட்ட அரசே வலிமைபடைத்த அரசாகும் என்றும் விளங்கியுள்ளது.

இது கடல் சார்ந்த வாணிபத்தையும், வேளாண்மை வழி நடைபெற்ற வர்த்தகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாணிபத்திற்கான வழிகள் அன்று முக்கியமாகக் கருதப்பட்டன. கடல் வழி வாணிபமாயினும், தரை வழி வாணிபமாயினும், பெருவழிகளும் அவை இணைக்கும் தமிழ் நிலப்பகுதிகளும் முக்கியமானவை.

Leave A Reply

%d bloggers like this: