சென்னை-நவ.22-

“ஐடிபிஐ தனியார் மயமாக்கலை எதிர்த்தும், ஐடிபிஐ-பொதுத்துறை தன்மையைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும்” தமிழ்நாடு கிளையின்  ஐடிபிஐ வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு அகில இந்திய ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயல் தலைவர் ஏ.கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

பொருளாதார அறிஞர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா சிறப்புரையில், “125 கோடி இந்திய மக்களில் 100 பில்லியனேர்கள் இருப்பது இந்தியாவில் அசமத்துவத்தை உணர்த்துகிறது. இதற்குக் காரணம் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம். உலகமயம் என்பதை கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாகப் பார்ப்பது அபத்தம். பெருமளவு கட்டற்ற இறக்குமதி, தொழில் உற்பத்தி நடவடிக்கைகளே இல்லாத நிதி மூலதனப் பாய்ச்சல் என்பதான இரு கூறுகளை உலகமயம்உள்ளடக்கியுள்ளது. எந்தக் கட்சி இந்தியாவை ஆண்டாலும் அதன் நிதி அமைச்சர்கள் அந்நிய நிதி மூலதனத்துக்கு ஆதரவாகவே பேசுகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தொகை வழங்கும் இந்திய அரசு ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அருவருப்பாகப் பார்த்து மறுதலிக்கிறது. உலகிலேயே வெல்த் டாக்ஸ் எனப்படும் வள வரி ஒரு பைசா கூடச் செலுத்தாத செல்வந்தர்கள் இருப்பது இந்தியாவில் மட்டும்தான். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாது ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நேரத்தில் பல வங்கிகளில் வாங்கிய கடனைக் கட்டாமல் ஏமாற்றும் விஜய் மல்லையா நாடுநாடாகச் சுற்றுகிறார். அவரை ஒருநாள் கூட சிறையில் அடைக்கத் தயங்குகிறது இந்திய அரசு. இதுதான் உலகமயம்” என்று குறிப்பிட்டார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தமது வாழ்த்துரையில், “பேஸல் ஒன்று, இரண்டு, மூன்று விதிமுறைகளை இந்திய அரசு அமல்படுத்தத் துடிக்கும் அதே வேளையில் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் பல பேஸல்- இரண்டைக் கூட சரியாக அமலாக்கவில்லை. மேற்கத்திய வங்கிகள் நிதி மூலதனம் சார்ந்து இயங்கும்போது, வளர்முக நாடானஇந்தியாவில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செலுத்தும் சேமிப்பை மட்டுமே நம்பி வெற்றிகரமாக இயங்குகின்றன”, என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இ. அருணாசலம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். ஏ.சீனிவாசன், அகில இந்திய ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ .வில்லாளன், ஐடிபிஐ வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கே சத்யநாராயணன் அகில இந்திய ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பெண் ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கனோர் பங்கேற்றனர்.

Leave A Reply