மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஓகேனக்கல்லில் குளிக்கத் தடை

சென்னை, நவ.22-

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை 9 ஆயிரத்து 978 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 87.16 அடியில் இருந்து 88 அடியை எட்டியது.

தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் விரைவில் 90 அடியை எட்டிவிடும். அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் தண்ணீர் 10 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஞாயிறுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.  அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Leave A Reply