வரலாற்றுச் சான்றுகள் மறுப்பு, மத அடிப் படையிலான சகிப்பின்மை, அதையொட்டி பல வன்முறைகள் பற்றிய செய்திகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன. மத்தியில் பாஜக ஆட்சியமைத்தபின் இந்தப்போக்குகள் புதிய துணிவோடும், தட்டிக்கேட்கயாருமில்லை என்ற ஆணவத்தோடும் தொடர்வதை ஜனநாயக சக்திகள் அனைத்தும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில், முற்போக்கான கருத்துகளின் ஊற்றாக, பன்முகப் பண்பாடுகள் போற்றப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் அடையாளம் பெற்றிருக்கிறது. அண்மை ஆண்டுகளாக தமிழகத் தின் அந்த ஆரோக்கியமான அடையாளத்திற்கு ஆபத்துகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இந்தப் போக்கு அதிகரித்து வருவது வெளிப்படை. இப்போது, வேலூரில் நடைபெற இருந்த திப்பு சுல்தான் விழாவுக்குக் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் விழாவுக்கு, சங் பரிவாரக் கும்பல்கள் எதிர்ப்புத் தெரிவித்து வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. வேலூரில் விழாவுக்கான முன்னேற் பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்குத்தடைவிதித்துள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று காரணம் கூறியிருக்கிறது.

இங்கேயும் சிலர் இதைச் சாக்கிட்டு மத மோதலாக மாற்ற முயல்வார்கள்தான். அப்போது மக்களை பாதுகாப்பதுதான் அரசின் பொறுப்பு. பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி தடை விதிப்பது, முன்னெச்சரிக்கை அல்ல, அரசியல் உறுதி இல்லாததன் வெளிப்பாடே. காவல்துறையினர் தாங்களாக இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள், அரசின் ஒப்புதலுடனேயே செயல்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.

சட்டம் ஒழுங்கை அச்சுறுத்துகிற சக்திகளுடன் அரசு சமரசம்செய்துகொள்கிறது என்பதே இதன் அர்த்தம்.திப்பு சுல்தான் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரு பேரரசின் தலைசிறந்த மன்னர். இந்தியாவை வளைத்துப்போட வலை வீசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். சிறைப் படுத்தப்பட்டு, தங்களுக்குக் கட்டுப்பட்டு நிர்வாகம் செய்வதானால் மன்னித்து மறுபடியும் ஆட்சியில் அமரவைப்பதாக அதிகார பீடத்தினர் பேரம் பேசிய போது, “ஆடுகளாக இருநூறாண்டுகள் வாழ்வதை விட, புலியாக இரண்டு நாட்கள் வாழ்வதே பெருமை” என்று அறிவித்து மரண தண்டனையை எதிர்கொண்டவர்.அது மட்டுமல்லாமல், தனது சொந்த சமய நம்பிக்கைகள் ஒருபோதும் ஆட்சி நிர்வாகத்தில் குறுக்கிட அனுமதிக்காதவர். இந்து மடங்கள் தாக்கப் பட்டபோது, தாக்கியவர்களை முறிடித்ததோடு, மடங்களைப் பாhதுகாக்க நிதிஉதவி வழங்கியவர். மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு உயர் முக்கியத்துவம் அளித்தவர் என்று வரலாற்று ஆய்வா ளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

அன்று எல்லா மன்னராட்சிகளிலும் இருந்த அதிகார அணுகு முறைகள் அவரது ஆட்சியிலும் இருந்தன என்றாலும், விவசாயிகளுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கு மதிப்பு, ஏழைகளுக்கு உதவி என்று அவரதுவேறு பல கண்ணோட்டங்கள் குறிப்பிடப்பட வேண் டியவை. அப்படிப்பட்டவரை வெறும் முஸ்லிம் மன்னராகச் சுருக்கி, எதிரியாகச் சித்தரிப்பது மக்களிடையே மதப் பகைமையைத் தூண்டுகிற பிளவுவாத அரசியல் செயல் திட்டம்தான். வேலூர் விழாவுக்குத் தடைவிதித்த நடவடிக்கை இத்திட்டத்திற்கு உதவு வதாகவே இருக்கிறது என்பதை, சகோதரத்து வத்துடன் பழகுகிற தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

 

Leave A Reply

%d bloggers like this: