சிதம்பரம்,நவ.21-

left parties

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டமும் சாலை மறியலும் நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம் நகராட்சியில் வெள்ளம் பாதித்த பகுதியில் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம் அருகே உள்ள கலுங்குமேடு பகுதியில் 75 குடிசை வீடுகள் இருந்தும் 4 வீட்டுக்கு தான் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியதால் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி அண்ணாமலை நகர் செயலாளர் செல்வம் தலைமையில் பிச்சாவரம்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மறு கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல் பரங்கிபேட்டை ஒன்றியம் பெரியபட்டில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சிதம்பரம்-கடலூர் சாலையில் மறியல் செய்தனர். இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, மதிமுக ஒன்றியச் செயலாளர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தில், கணக்கெடுப்பில் குளறுபடி நடக்கிறது என்றும், முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.

இதே போல் சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் வெள்ளத்தில் சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் இல்லை என்றதால், கோபம் அடைந்த மக்கள் சிதம்பரம்-சேத்தியதோப்பு சாலையில் மறியல் போராட்டம் செய்தார்கள். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கீரை ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

குமராட்சி ஒன்றியத்தில் உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தில் 180 குடிசை வீடுகள் உள்ளது. இந்த அனைத்து வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. ஆனால் அரசு 16 வீடுகளுக்கு மட்டும் தான் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் மூர்த்தி தலைமையில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மறு கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் வெள்ள நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். பிறகு தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி,வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி, சிவபுரி கிராமத்திலும் வெள்ள நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.