புதுதில்லி, நவ.21 –

மைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

பருப்பு விலை உள்ளிட்டு அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அத்துறையின் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து அனைத்து துறைகளின் அதிகாரங்களையும் அவரே எடுத்துக் கொள்வதாக பல சமயங்களில் எதிர்கட்சிகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்துள்ளன. சில சமயங்களில் மோடியின் அனுமதியின்றி எந்தக் கருத்தையும் அமைச்சர்களும் எம்பிக்களும் தெரிவிக்கக் கூட முடியாது என்றும் செய்திகள் வெளிவந்திருந்தன. தற்போது அதை நிரூபிக்கும் விதமாக, மோடி அரசின் கீழ் தனது அமைச்சகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம் விலாஸ் பஸ்வான், “மத்திய நுகர்வோர் அமைச்சகத்திடம் உணவு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த திட்டவட்ட அதிகாரமும் இல்லை”
என்று கூறியுள்ளார். மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறையானது 22 அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலையைக் கண்காணித்து கட்டுப்படுத்துகிற துறையாகும்.

இத்துறையே உணவு தானியங்கள் இருப்பு வைத்துக் கொள்ளும் வரம்பைத் தீர்மானித்து மாநில அரசுகளுக்கு உத்தரவிடும். அத்துடன் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிடும் அதிகாரமும் கொண்டது. ஆனால் ஒரு மூத்த அமைச்சரான பஸ்வான் விலைவாசியைக் கட்டுப்படுத்திட தனது அமைச்சகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறியிருப்பது எதைக் காட்டுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துக்கொண்டு மோடி செயல்படும் விதத்தை இது படம் பிடித்துக் காட்டுகிறது, அதுமட்டுமின்றி உணவுப்பொருட்களின் விலைகளை அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளே தீர்மானிக்கின்றன, அவற்றின் லாபத்தைப் பெருக்கவே திட்டமிட்ட பதுக்கலும், விலை ஏற்றமும் நடக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. இவர்களின் கைகளில் அதிகாரம் உள்ளதால், தனது துறையால் ஒன்றும் செய்ய முடியாது என பஸ்வான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தற்போது துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு 190 ரூபாய்க்கு மேலும் தக்காளி கிலோ ஒன்றுக்கு 68 ரூபாய்க்கும் வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் தான் பஸ்வானை பகிரங்கமாக தனக்கு அதிகாரமில்லை என்று கூற நிர்ப்பந்தித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தனது துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்று கோரி வருகிறார்.

Leave A Reply

%d bloggers like this: