சிவாஜி படத்தில் ரஜினிகாந்த், மிளகாயை தின்றுவிட்டு படும்பாட்டை பார்த்திருப்போம். ஒரு சிறு கிண்ணத்தில் வைத்த மிளகாயைத் தின்றதற்கே அந்தப் பாடு என்றால் இரண்டரைக் கிலோ மிளகாயைத் தின்பவரை என்ன சொல்வது? உணவில் காரம் அதிகமாக எடுத்துக் கொண்டால் குடற்புண் ஏற்படும் என்ற அச்சத்தால் நாம் அதனை குறைவாக சேர்த்துக் கொள்வோம். ஆனால் சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள ஷவோலி பகுதியைச் சேர்ந்த லியோங்ஸி என்பவரின் நிலைமையோ வேறு.மிளகாய்களின் அரசன் என்று மாநில அரசே அவருக்கு பட்டம் அளித்துள்ளது என்றால் அவர் எத்தனை மிளகாய்களை உட்கொள்வார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.காலையில் எழுந்தால் நீரால் நாமெல்லாம் வாயைகொப்பளித்தால், யோங்ஸியோ, மிளகாய் தூள் கலந்தநீரில் தான் வாய் கொப்பளிப்பாராம். பல் துலக்குவதை விட, சில மிளகாய்களை மென்று தின்றாலே போது மாம். அதுவே பற்களை சுத்தம் செய்து விடும் என்று அவர் கருத்து கொண்டுள்ளார்.

மிளகாய்களை உண்பதில் அரசன்

நாம் ஒரு மாதத்துக்குப் பயன்படுத்தும் மிளகாய்களை இவர் ஒரே நாளில் பயன்படுத்தி வருகிறார். மிளகாய் அல்லது காரம் இல்லாமல் சாப்பிடும் எந்த உணவும் அவருக்கு சுவையற்றவையானது. சாப்பிடும்போது சோறோ, முட்டையோ அல்லது இறைச்சியோ என எதுவும் இல்லை என்றால் கூட யோங்ஸிக்குப் பரவாயில்லை. ஆனால் மிளகாய் இல்லை என்றால் அவ்வளவுதான். மிளகாய் விரும்பியான இவருக்கு அன்றாடம் அதிக அளவு மிளகாய் தேவைப்படுகிறது. அதனால், அதனை விலை கொடுத்து வாங்கும் வகையில் அவரிடம் வசதி இல்லை. அதனால், தனது வீட்டுக்குப் பின்பகுதியில் உள்ள நிலத்தில் 8 வகையான மிளகாய்களை பயிரிட்டு பாதுகாத்து வருகிறார்.முதலில் குறைந்த அளவு மிளகாய்களையே இவர் உண்டு வந்துள்ளார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் மிளகாய் அல்லது மிளகாய்ப் பொடிகளை அதிகம் உண்ணத் தொடங்கினார்.அதற்குக் காரணம் என்னவென்றால், ஒருமுறை அவரது மகன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான ரூபாய் அவருக்குத் தேவைப்பட்டதால் உணவுகூட உட்கொள்ளாமல் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது ஒருமுறை தெருவில் மயங்கி விழுந்துவிட்டாராம். அப்போது வழியில் வந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு வழங்கப்பட்டது என்ன தெரியுமா. 2 கிண்ணங்கள் நிறைய மிளகாய் பொடியும், ஒரு குவளை நீரும்தான். அதை உட்கொண்டு தனது வயிற்றுப்பசியை அவர் ஆற்றிக் கொண்டார். இவ்வளவு மிளகாய்ப் பொடியை சாப்பிட முடியும் என்று அப்போதுதான் அவருக்கே விளங்கியுள்ளது. அன்றிலிருந்து அதிக அளவு மிளகாய்களை உட்கொள்ளத் தொடங்கிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, அன்றாடமும் சுமார் இரண்டரைக் கிலோ அளவிலான மிளகாய்களை தனது உணவாக அவர் உண்டு வருகிறார். இந்தப் பழக்கத்தால் ஒருமுறை உணவகம் ஒன்றில் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அங்கு, அவரிடம் வைக்கப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதனை அவர் திருடிவிட்டதாக ஊழியர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால், நான்திருடவில்லை. அதனை சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஊழியர்கள் நம்பவில்லை. பிறகு, அவர்கள் கண்முன்னே, மற்றொரு பாட்டிலில் இருந்த மிளகாய்ப் பொடியைச் சாப்பிட்டு குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொண்டாராம். இதைப் படித்ததும் நம்ம ஊர் பரோட்டா சூரி நினைவுக்கு வருகிறாரா?

Leave A Reply

%d bloggers like this: