image5221வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தும் நேரடியாக நிவாரணப் பணிகளை செய்து வருகிறோம். கடலூர் மாவட்டத்திற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்களோடு நானும், பல பகுதிகளுக்குச் சென்றேன். பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தரராசன், கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்களுடன் வடசென்னையிலும், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் தென்சென்னை பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதறிய மக்கள்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி வட்டத்தில் காடாம்புலியூர் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த 130 குடும்பங்களை சந்தித்தோம். “எங்கள் வீடுகள் எல்லாம் தட்டு, முட்டுச் சாமான்களோடு வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டன, நாங்கள் நிர்க்கதியாக உள்ளோம். எங்களுக்கு உணவு, உடை வழங்குவதோடு, மாற்று இடத்தில் எங்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அழுதுகொண்டே முறையிட்டார்கள்.குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரிசியும், சமையல் பாத்திரமும், போர்வையும் அளித்துவிட்டு பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு சென்றோம். அந்தக் கிராமத்தில் வெள்ளத்தில் 10 பேர் இறந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த குடிசை வீட்டை பார்க்கச் சென்ற போது அதிர்ச்சிக்குள்ளானோம். குடிசை வீடு அங்கு இருந்ததற்கான அடிச்சுவடே இல்லை. குடிசை வீடு இருந்த இடத்தில் சகதியில் துணியும், சில நோட்டுப் புத்தகங்களும் கிடந்தன. ஒரு நோட்டை எடுத்து பார்த்த போது சிவா என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தன்னுடைய வீட்டுப்பாட நோட்டில் ஒரு பக்கத்தில் “உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மை வெளிப்படுத்துவது வாய்மை” என எழுதியிருந்தார். அந்த வெள்ள நீர் சிறுவனுடைய உயிரையே குடித்துவிட்டது. பெரிய காட்டுப்பாளையத்தில் ஓடைக்கரை புறம்போக்கில் தான் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளம் வந்தால் வீடுகள் சேதமாகிவிடுமே என்பதை ஏன் அரசு அதிகாரிகள் யோசிக்கவில்லை?.அடுத்து வெள்ளத்தில் நான்கு பேர் இறந்த விசூர் கிராமத்திற்குச் சென்றோம். நவம்பர் 9 அன்று மதியம் 1 மணியளவில் அந்த கிராமத்தின் ஊடே ஓடும் வெள்ள வாரி ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து பல வீடுகள் நாசமானதோடு 1500 ஏக்கருக்கு மேல் மண் மூடி நிலங்கள் சாகுபடிக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்த போது ஏற்பட்ட துயரத்தை அந்த கிராமத்தைச் சார்ந்த உக்கிரவேல் விளக்கினார். “ஆறு உடைந்து ஊருக்குள் நுழைந்து என் வீடு உள்ளிட்டு பல வீடுகளை அடித்துச் சென்றுவிட்டது. என்னுடைய இரண்டு மகன்கள், மகள் மூவரையும் மரத்தில் ஏறி நிற்கச் சொன்னேன். மகன்கள் ஏறிவிட்டனர், 18 வயதான என்னுடைய மகளால் ஏற முடியவில்லை. என் மனைவி வாசுகியையும், மகள் கௌசல்யாவையும் காப்பாற்ற முயற்சித்தேன். தோற்றுவிட்டேன். என் கண் முன்னாலேயே என்னுடைய மனைவியையும், மகளையையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது” என்று கண்ணீர் மல்க கதறினார். சென்னையில் சில பகுதிகளுக்குச் சென்ற போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. உதாரணத்திற்கு ஒன்று, திருவொற்றியூரில் சடையங்குப்பத்தில் வாழும் இருளர் சமூகத்தைச் சார்ந்த 45 குடும்பங்கள் (சுமார் 150 பேர்) குழந்தைகள், வயதானோர் உள்ளிட்ட அனைவரும் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பரம ஏழைகள். வாழ்வாதாரமில்லாத வறியவர்கள். இவர்கள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் கடல் போல் இருப்பதை பார்த்தால் இன்னும் பல நாட்களுக்கு இவர்கள் தங்கள் குடிசைகளுக்கு செல்ல முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள நிலைமை இது தான். வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை தடுத்திருக்க முடியுமா?, குறைத்திருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.பாதிப்பை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் குறைத்திருக்க முடியும்.

5 ஆண்டுக்கு முன்பு நடந்த அதே பயங்கரம்

பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததோடு அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களையும் சந்தித்தோம். ஒரு பத்திரிகையாளர் 2010ஆம் ஆண்டு நவம்பர் 4ஆவது வாரம் பெரிய காட்டுப்பாளையமும், விசூர் கிராமமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்ற செய்தி அடங்கிய நாளேட்டின் நகலை கொடுத்தார். “2010ஆம் ஆண்டு இதே காலத்தில் அடித்த வெள்ளத்தினால் விசூர் கிராமத்தில் ஆறு உடைந்து வெள்ளப்பெருக்கெடுத்து 500 ஏக்கருக்கு மேல் மண் மூடிவிட்டது. பெரியகாட்டுப்பாளையத்தில் ஓடையில் வந்த வெள்ளத்தினால் அக்கிராமத்து மக்கள் சில நாட்கள் பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்” என்றார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வருமுன் காக்கத் தவறிய அரசு

இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வானிலை ஆராய்ச்சி மையம் நவம்பர் மாதத்தில் கடும் மழை, புயல் வரும் என்று எச்சரித்திருந்தது. அக்டோபர் கடைசி வாரத்தில் கொடநாட்டிலிருந்த படி முதலமைச்சர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகளுக்கு, பயிர் சேதங்களுக்கு, வீடு சேதங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்”என அறிவித்தார். ஆனால் வெள்ளம் வந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளம் வந்த பிறகு 10 அதிகாரிகளை, 5 அமைச்சர்களை முதலமைச்சர் கடலூருக்கு அனுப்பினார். இந்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் வானிலை எச்சரிக்கை வந்தபோதே கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பியிருந்தால் பல உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். மாநில அரசு வருமுன் காப்போம் எனச் செயல்படவில்லை. மக்களைக் காக்க வேண்டிய கடமைகளிலிருந்து மாநில அரசு தவறியுள்ளது.பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதம்பரம் வட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தப் பகுதியில் இத்தகைய பாதிப்பு தொடர்கதையாவது நீடிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் அரசுத் தரப்பில் இல்லை. நிரந்தரமான வெள்ளத்தடுப்பு ஏற்பாடும் இல்லை. இது கடந்த திமுக ஆட்சியிலும் செய்யப்படவில்லை. தற்போதைய ஆட்சியிலும் நடக்கவில்லை. ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன்பு பருவமழை பாதிப்பு முன்தடுப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் செய்ய வேண்டும். இவ்வாண்டு நவம்பர் முதல் வாரத்தில் தான் இந்தப் பணியை அரசு நிர்வாகம் துவங்குவதாக இருந்தது. ஆனால் வெள்ளம் வந்த பிறகு முன்தடுப்புக்காக ஒதுக்கீடு செய்துள்ள நிதியை வெள்ள நிவாரணத்திற்கு சேர்த்து செலவு செய்வதாக தகவல் வந்திருக்கிறது. வெள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்று விமர்சனம் செய்தால் அரசியல் செய்வதாக ஆளும் அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று சொல்லுகிற போது அரசின் தோல்வியை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது.

ஏரிகள் உடைந்ததே அதிக சேதத்திற்கு காரணம்

ஏற்பட்ட பாதிப்பிற்கு காரணம் என்ன? உண்மையைச் சொல்ல அரசு மறுக்கிறது. உதாரணமாக பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் தரைக்கு மேல் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் அடித்திருக்கிறது. மழை நீரால் இந்த அளவுக்கு வெள்ளம் உருவாக வாய்ப்பில்லை. திடீரென்று ஏரிகள் உடைந்ததால் தான் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 29 ஏரிகள் உடைந்துள்ளதாக ஏற்றுக் கொள்ளும் அமைச்சர்கள், ஏரி உடைந்ததால் தான் சேதம் அதிகம் என்பதை மறுத்து வருகின்றனர். அரசு நிர்வாகம் உண்மையை மறைப்பது அரசியல் இல்லையா?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய சக்திக்கேற்ற அளவில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்சி அணிகள் நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். நிவாரணப் பணிகளை அரசு செய்ய வேண்டும் என்பதை மக்களைத் திரட்டி வலியுறுத்தவும் வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு மார்க்சிஸ்ட்டுகள் நிற்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.