நியூயார்க், நவ. 21-

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

சிரியா மற்றும் இராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரிவான டேஷ் டக்பிரி அமைப்பை ஒடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 13ம் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இரவு விடுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 350 பேர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய நாள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன. அதில் 44 பேர் கொல்லப்பட்டார்கள். 240 பேர் காயமடைந்தனர். இரண்டு தாக்குதல்களிலும் காயமடைந்தவர்களில் பலர் உயிருக்காகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் வேண்டுகோள் வைத்தது.

இந்தக் கோரிக்கையை விவாதித்த 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சில், பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தில், அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்றும், சிரியா மற்றும் இராக்கில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அது எடுத்துச் செல்லப்பட்டு, பயங்கரவாதிகளின் பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாரீஸ் மற்றும் பெய்ரூட்டில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களை நடத்தும் பலமும், எண்ணமும் அந்த அமைப்புக்கு இருக்கிறது என்றும் தீர்மானம் எச்சரித்துள்ளது.

மோதல் நடந்து வரும் பகுதிகளிலிருந்து தொலைவில் இருக்கும் உறுப்பு நாடுகள் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. தனது வன்முறைத் தீவிரவாதத்தைக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு அனைத்து வகையான சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் மீறியுள்ளது. சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் இந்த அமைப்புக்கு எதிராக அனைத்து நாடுகளும் திரள வேண்டும் என்று கவுன்சில் கோரியுள்ளது. மேலும், பிற நாடுகளிலிருந்து பயங்கரவாதிகளை சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதையும், நிதியுதவி தருவதையும் தடுப்பதில் உலக நாடுகள் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரான்ஸ் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. நீண்ட நாட்களுக்கு முன்பே இத்தகைய தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும். இப்போதாவது விழித்துக் கொண்டார்களே என்றும் ஐ.நா.சபைக்கான சிரியாவின் தூதர்பஷர் அல் ஜாப்ரி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: