திருப்பூர், நவ. 21 –

பனியன் தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் ஏஐடியுசி கோரிக்கை

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ.577 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி பனியன் லேபர் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் ஏஐடியுசி அலுவலகத்தில் வெள்ளியன்று அந்த சங்கத்தின் தலைவர் கே.சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடைமுறையில் உள்ள சம்பள ஒப்பந்தம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய சம்பள ஒப்பந்தத்திற்கான கோரிக்கை உருவாக்குவது குறித்து கடந்த 17ம் தேதி ஏஐடியுசி பனியன் சங்க பொதுக்குழு நடைபெற்றது. இதில் விரிவாக விவாதித்து புதிய கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன.நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு ரூ.577 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு வர வேண்டியிருப்பதால் பயணப்படி மாதம் ரூ.1000 வழங்க வேண்டும். வீட்டு வாடகைப்படி மாதம் ரூ.3000 வழங்க வேண்டும்.பெண் தொழிலாளர்களுக்கு திருமண உதவி நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஈ.எஸ்.ஐ. திட்டம் வாய்ப்பில்லாத நிறுவனங்களில் “மெடி கிளைம்“ எனப்படும் மருத்துவக் காப்பீட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்.திருப்பூரில் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த தொழிலாளர் நலத்துறை, உற்பத்தியாளர் தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தினர் அடங்கிய முத்தரப்பு கண்காணிப்புக் குழுவை நிரந்தரமாக அமைக்க வேண்டும்.பணிக்காலத்தில் தொழிலாளி மரணமடைந்தால் அவரதுகுடும்பத்திற்கு பாதுகாப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் மீது பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற அவர்கள் முன்வர வேண்டும். புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற காலதாமதமானால் அதற்கு நிர்வாகத்தரப்பே பொறுப்பேற்க வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உற்பத்தியாளர் தரப்பு தாமதித்தால் அனைத்து சங்கங்களும் கலந்து பேசி புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து போராட்ட உத்தி வகுக்கப்படும். என கே.சுப்பராயன் கூறினார். அப்போது சங்க நிர்வாகிகள் சி.பழனிசாமி, என்.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: