கடலூர், நவ. 21-

left parties

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மாவட்டமே நிலை குலைந்து நின்றது. 25 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன. வெள்ள நீர் புகுந்ததில் வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாய் மக்கள் நிற்கின்றனர். நெல், கரும்பு, வாழை, சோளம், உளுந்து, மணிலா பயிற்கள் 2.5 லட்சம் ஏக்கருக்குமேல் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 60 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 1000 ம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 500 கிலோ மீட்டர் சாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, கிராமப்புற சாலைகளும் சேதமடைந்துள்ளன. பரவனாறு, கெடிலம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகள் சேதமடைந்தும் பாலங்கள் உடைந்தும், அரசு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் இறந்துள்ளன.

மீன்பிடி தொழிலும் முடங்கி உள்ளது நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்துள்ளன. இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாய தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி முழுமையாக நடைபெறவில்லை. கணக்கெடுக்கும் இடத்தில் கூட சேத விபரத்தை குறைத்து மதிப்பிடுவதும், அவ்வாரே அரசுக்கு தெரிவிக்கும் நிலையும் உள்ளது. இதனால் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே, முறையாக கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கோரி அரசின் கவனத்தை ஈர்க்க போராடும் போது காவல் துறையினர் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இம்மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply