ஆந்திர சிறைகளில் பலியாகும் தமிழர்கள் மாநில அரசு விசாரணை நடத்த கோரிக்கை

திருவண்ணாமலை, நவ. 21-

ஆந்திர சிறைகளில் பலியாகும் தமிழர்கள்

ஆந்திர சிறைகளில் உயிரிழக்கும் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த ஆவன செய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 7 ந்தேதி ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களில் 13 பேர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். மேலும், திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் கடந்த 2013 ம் ஆண்டு, செம்மரம் வெட்ட வந்ததாக ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த 356 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் காளஹஸ்தி சிறையில் 60 பேரும், பீலேரு சிறையில் 90 பேரும், திருப்பதி சிறையில் 140 பேரையும் அடைத்தனர். இதில் 2 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் புதன் அன்று திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த லோகநாதன் (50) மர்மமான முறையில் இறந்தார்.

ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் காளஹஸ்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் நீப்பந்துறையை சேர்ந்த ரத்தினம் (27) சிறுநீரக கோளாறு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசியபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும், மேலும், சிறையில் உள்ள தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த இருவரையும் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் அவர்கள், உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த இருவரும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் செல்லும் போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆந்திர வனத்துறையினரின் அடாவடி குறித்து பேட்டியளித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ஆந்திர அரசும், வனத்துறையினரும் சேர்ந்து நடத்தும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்த இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், சிறைகளில் உள்ள 2 ஆயிரம் பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ரத்தினத்தின் மனைவி குமாரத்தி, தாய் புதுரா ஆகியோரிடம் ரத்தினத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து போலீசாரால் துன்புறுத்தப்பட்டதால் ரத்தினம் உயிரிழந்தார் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரத்தினத்தின் மரணம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் செங்கம்-அரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Leave A Reply