ஐதராபாத், நவ. 21-

ஆந்திராவில் பலத்த மழை

ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு 35 பேர் பலியாகியுள்ளனர்.

மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழக கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த நிலை ஆந்திரா மாநிலம் நோக்கி நகர்ந்தது. இதனால் ஆந்திராவில் உள்ள நெல்லூர், சித்தூர் மற்றும் கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு முடுக்கி விட்டு உள்ளார். மேலும் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். நெல்லூர் மாவட்டம்தான் வெள்ளத்தின் பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை.

மழையினால் கடப்பா மாவட்டத்தில் 15 இடங்களில் தரை பகுதி பூமிக்குள் இறங்கியது. கடப்பா நகரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீதுர்க்கா மல்லேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிய புக்கலபள்ளி, கூடவாங்கலபள்ளி, நாகிரெட்டி உள்பட 15 இடங்களில் தரை பகுதி கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் இறங்கியது. கிணறு போல பள்ளங்கள் ஏற்பட்டு அதில் நீருற்றுகள் கிளம்பி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உதவ மத்திய அரசு உடனே ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்து உள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை மற்றும் விமானப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: